
பாஜகவும் - அதிமுக கூட்டணியில் இருந்த நிலையில், தமிழக பாஜகவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் இணைந்து என்.டி.ஏ கூட்டணியில் களம் கண்டது. இந்த நிலையில் கூட்டணி முறிவு ஏற்பட்டு அதிமுக தனித்துப் போட்டியிடுகிறது. இதனைத் தொடர்ந்து அதிமுக தேர்தல் குழுவை அமைத்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், என்.டி.ஏ கூட்டணியை தாங்கள் தான் உருவாக்கிக் கொடுத்ததாக அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி கூறியுள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பாஜக என்கிற கட்சி வட மாநிலத்தில் மட்டுமே இருந்தது; தென் மாநிலங்களில் அந்த கட்சியே கிடையாது. தென் மாநிலங்களில் அழைத்து வந்து கூட்டணி அமைத்தவர் ஜெயலலிதா. தேசியம் என்ற சொல்லுக்கு ஒரு அமைப்பை உருவாக்கி கொடுத்தவர் ஜெயலலிதா. பின்னர் தமிழ்நாட்டின் உரிமைக்காக கேட்ட கோரிக்கையை நிறைவேற்றாத காரணத்தால் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். அதிமுக கட்டிய கட்டடம் தான் என்.டி.ஏ கூட்டணி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பேசினார்.