சசிகலாவிடம் அ.தி.மு.க. தொண்டர்கள் பேசும் ஆடியோ அடுத்தடுத்து வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சசிகலாவுடன் பேசிய தொண்டர்களை அ.தி.மு.க.வின் தலைமை கட்சியிலிருந்து நீக்கி வருகிறது. தூத்துக்குடி மாவட்ட ‘ஜெ’ பேரவை இணைச் செயலாளரான ரூபவேலன் சசிகலாவிடம் பேசிய ஆடியோ வெளியாகியதோடு, கட்சிக்கு இரட்டை தலைமை கூடாது; ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று அவர் வெளிப்படையாகப் பேச, அ.தி.மு.க.வின் தலைமை அவரை கட்சியிலிருந்து நீக்கியது. இதனால் கோவில்பட்டி நகர மற்றும் ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் இருந்திருக்கிறார்கள்.
அதன் வெளிப்பாடாக கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நகர ஒன்றிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி கடலையூர் ரோட்டில் நடந்திருக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் ஆறுமுகப் பாண்டியன், ஒன்றிய மாணவரணிச் செயலாளர் செண்பகராமன் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க. இளைஞர் பாசறை நகரச் செயலாளர் பாலாஜி, மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் கவுசல்யா, ஒன்றிய விவசாய அணி இணைச் செயலாளர் நடராஜன் அ.தி.மு.க. மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் கட்சியால் நீக்கப்பட்ட மாவட்ட ‘ஜெ’ பேரவை இணைச் செயலாளர் ரூபவேலனும் அழைக்கப்பட்டு அவரும் கலந்துகொண்டார்.
கூட்டத்தில், "அ.தி.மு.க. பொதுச் செயலாளரான சசிகலா தொடர்ந்து நீடிக்க வேண்டும். அவரது தலைமையில் அ.தி.மு.க இயங்க வேண்டும். அ.தி.மு.க. தொண்டர்களிடம் சசிகலா தொலைபேசி மூலம் உரையாடிவரும் சூழலில் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் கட்சியை விட்டு நீக்கும் எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர் செல்வம் ஆகியாரின் செயல்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பது" என்றும், "கட்சி அடிப்படை விதிகளுக்கு மாறாகத் தொடர்ந்து இந்த நிலை நீடிக்குமேயானால் எடப்பாடி பழனிச்சாமி, ஒ.பன்னீர்செல்வம் இருவரையும் கட்சியிலிருந்து நீக்குவதற்காகத் தொண்டர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்" என்றும் தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவினரின் இந்த தீர்மானங்கள் அக்கட்சிக்குள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.