கரூரில், அம்மாவட்ட தி.மு.க சார்பில், 16ஆம் தேதி முதல் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்னும் தேர்தல் பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் மாநில விவசாய அணிச் செயலாளர் சின்னசாமி தலைமையில், அரவக்குறிச்சி, கரூர் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து 17ஆம் தேதி கிருஷ்ணராயபுரம் தொகுதி உப்பிடமங்கலம் பகுதியில் பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட அரசு விழாவில், மக்கள் பிரதிநிதிகளான தி.மு.க எம்.எல்.ஏ.வான எனக்கும், குளித்தலை தொகுதி எம்.எல்.ஏ ராமர், கரூர் எம்.பி. ஜோதிமணி ஆகியோருக்கு அழைப்பு கொடுக்கவில்லை.
நீட் தேர்வு பற்றி பொய்யான தகவலையும், கருத்துகளையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சித்தரித்து வருகிறார். நீட் தேர்வுக்கு அனுமதி வழங்கியது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான். அதை மறைக்க, தி.மு.க ஆட்சியில்தான் இத்திட்டத்திற்கு முன் மொழியப்பட்டது எனக் கூறும் முதல்வர், இவரது ஆட்சியில் எதற்கு அனுமதி அளித்தார். நீட் தேர்வைப் பொறுத்தவரை எடப்பாடி அரசு மாணவர்களை ஏமாற்றி வருகிறது.
எடப்பாடி பழனிசாமி ஒரு ஜெராக்ஸ் முதல்வர்தான். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் பாதிப்பு தொடர்பான அறிக்கை விடுத்த பிறகு, அதைச் செயல்படுத்தும் ஜெராக்ஸ் முதல்வராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். உதாரணமாக, நீட் தேர்வு ஒதுக்கீட்டில் இடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை தி.மு.க ஏற்கும் என ஸ்டாலின் கூறிய பிறகுதான் அன்று மாலையே, மாணவர்களின் செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
கரோனா பாதுகாப்பு நடவடிக்கை எனக் கூறி மக்களுக்கு 1,000 ரூபாய் கொடுத்துவிட்டு மின் கட்டணத்தில் பல ஆயிரம் ரூபாயை கொள்ளை அடிக்கும் அரசாக அ.தி.மு.க. அரசு உள்ளது. போக்குவரத்துத் துறையில், கனரக வாகனங்கள் எஃப்.சி எடுப்பதற்கு, ஒளிரும் ஸ்டிக்கர், ஜி.பி.எஸ் கருவி, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துவதில் சுமார் 2,300 கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்துள்ளது என்று எந்தக் கட்சியும் சாராத லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதை அறிந்தும், அந்தத் துறை சார்ந்த அமைச்சர் மீது இதுவரை எடப்பாடி பழனிசாமி, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எடுக்கவும் முடியாது. ஏனென்றால், இந்த ஊழலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் பெரும் பங்குள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. வேளாண் சட்டத்தை ஆதரிப்பதாகப் பேசக்கூடிய முதல்வர் எடப்பாடி, ஒரு விவசாயி அல்ல. அவர் விவசாயிகளின் துரோகி. கரூர் புதிய பேருந்து நிலையம் திருமாநிலையூர் பகுதியில் அமைக்க வேண்டும் எனக் கூறிய உச்சநீதிமன்றம், 22 மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி அரசு ஏன் நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தவில்லை.
நீதிமன்றம் உத்தரவிட்ட இடத்தில் பேருந்து நிலையம் அமைக்காத அ.தி.மு.க அரசு, வேறு புதிய இடத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருவதில் உள்ள காரணம் என்ன? புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தின் அருகே அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள், அவர்களின் உறவினர்கள் பெயரில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இப்போது பரிமாற்றம் நடந்துள்ளது. அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் பெரும் பங்கு உள்ளது.” என்றார்.