தமிழக சட்டமன்றத்துக்கு கடந்த 2011-ல் நடைபெற்ற தேர்தலில், சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். இவரை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட முன்னாள் மேயர் சைதை துரைசாமி, ஸ்டாலினின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கிற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் 4 முறை நேரில் ஆஜராகி வழக்கை எதிர்கொண்டார் ஸ்டாலின்.
சில பல வருடங்களாக நடந்து வந்த அந்த வழக்கின் விசாரணை முடிந்து, 2017-ல் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.வேணுகோபால், ஸ்டாலினின் வெற்றி செல்லும் எனத் தீர்ப்பளித்து வழக்கைத் தள்ளுபடி செய்தார். இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து 2017, ஆகஸ்டில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் சைதை துரைசாமி.
அந்த மனுவுக்குப் பதில் அளிக்குமாறு மு.க.ஸ்டாலினுக்கும், சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கும் அப்போது நோட்டீஸ் அனுப்பியது உச்சநீதிமன்றம். ஆனால், அந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக விசாரணைக்கு வராமல் கிடப்பில் கிடக்கிறது.
இந்த நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள இந்த வழக்கின் விபரங்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. ஸ்டாலினுக்கு எதிரான வழக்கை மீண்டும் 'லைம் லைட்'டுக்கு கொண்டு வந்து, ஸ்டாலினுக்கு எதிராக, அரசியல் ரீதியாக செக் வைக்க முடியுமா? எனத் தமிழக அரசின் குற்றவியல் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்திருக்கிறார் எடப்பாடி.
இதனையடுத்து, கிடப்பில் கிடக்கும் அந்த வழக்குக்கு உயிர் கொடுக்க என்ன வழிகள் இருக்கின்றன? வழக்கை விசாரணைக்கு கொண்டு வருவதன் மூலம் ஸ்டாலினுக்கு எதிராக தீர்ப்பு கிடைக்க சட்டரீதியிலான பாயிண்டுகள் என்னென்ன இருக்கின்றன? இருக்கும் பட்சத்தில் அவைகளுக்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய முடியுமா? என்றெல்லாம் வழக்கறிஞர்களிடம் கேட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஸ்டாலினுக்கு எதிரான இந்த வழக்கு விவகாரம், விரைவில் பூதாகரமாகலாம் என்கிறது விபரம் அறிந்த வட்டாரம்!