சென்னை தியாகராய நகரில் உள்ள கறுப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் சீல் வைத்தனர்.
‘கறுப்பர் கூட்டம்' என்ற யூடியூப் சேனலில் 'கந்த சஷ்டி கவசம்' குறித்து தரக்குறைவாக விமர்சித்ததாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாகவும் தமிழக பா.ஜ.க சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் உரிமையாளர் செந்தில்வாசன் 15.07.2020 இரவு கைது செய்யப்பட்டார். அதையடுத்து அதன் தொகுப்பாளரான நாத்திகன் என்கிற சுரேந்தர் நடராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியிருந்தார்.
இந்நிலையில் புதுச்சேரி அரியாங்குப்பம் கோட்டைமேடு பகுதியிலுள்ள, பெரியார் படிப்பகத்தில் இருந்தடி தமிழக போலீசாரிடம் சரணடைய காத்திருந்தார். பின்னர் அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். புதுச்சேரியில் சரணடைந்த சுரேந்திரனை தமிழக போலீசார் சென்னை அழைத்துச் சென்றனர்.
புதுச்சேரியிலிருந்து சுரேந்திரனை மத்திய குற்றப்பிரிவு சென்னை போலீசார் அழைத்து வந்து விசாரித்தபின் சுரேந்தர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். எழும்பூர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட கறுப்பர் கூட்டம் சுரேந்திரனுக்கு 30- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள கறுப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் சீல் வைத்தனர். நள்ளிரவு இந்த அலுவலகத்திற்குச் சென்ற போலீசார், அந்த அலுவலகத்தில் ஆய்வு செய்தனர். பின்னர் சில ஆவணங்களை எடுத்தள்ளதாகக் கூறப்படுகிறது.