தமிழ் சினிமாவில் வித விதமான போலீஸ் சித்ரவதைகளைக் காட்டியிருப்பார்கள். போலீசின் மிருகத்தனமான சித்ரவதையை அப்பட்டமாகத் தோலுரித்த படம்தான் வெற்றி மாறனின் ‘விசாரணை'. ஜெயிலுக்குள் கைதிகளை போலீஸ் சித்ரவதை செய்வதை தனது "மகாநதி' படத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தார் கமல். ஏன் இதே கமல் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்திருந்த "குருதிப்புனல்' படத்தில், நாசரை தினுசுதினுசாக சித்ரவதை செய்வார்.

அப்படி சினிமா சித்ரவதையைப் பார்த்த கமலால், நிஜத்தில் போலீஸ் செய்யும் டார்ச்சரைத் தாங்க முடியாமல், சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு கதறியிருக்கிறார். லைக்கா சுபாஷ்கரண் தயாரிப்பில், ஷங்கர் டைரக்ஷனில் கமல் நடிக்கும் "இந்தியன்-2' படப்பிடிப்பு, சென்னை புறநகரில் உள்ள ஈ.வி.பி. ஸ்டுடியோவில் கடந்த பிப்.19—ஆம் தேதி இரவு நடந்து கொண்டிருந்தபோது ராட்சத கிரேன் ஒன்று அறுந்து விழுந்ததில் உதவி இயக்குனர் ஒருவர், இரண்டு தொழிலாளிகள் பலியாகினார்கள்.
அந்த ஸ்டுடியோ நசரேத் பேட்டை போலீஸ் லிமிட்டில் வருவதால், விபத்து வழக்காகப் பதிவு செய்து, மத்திய குற்றப் பிரிவிற்கு(சிசிபி) மாற்றினார்கள். இந்த விபத்து வழக்கு சம்பந்தமாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கமல், ஷங்கர், லைக்காவின் தயாரிப்பு நிர்வாகி சுந்தர்ராஜன் ஆகியோருக்கு விசாரணை அதிகாரியான ஜி. நாகஜோதி நோட்டீஸ் அனுப்பினார்.
பிப்.29, மார்ச்.02 ஆகிய தேதிகளில் டைரக்டர் ஷங்கர், நாகஜோதி முன்பு ஆஜராகி விளக்கமளித்தார். கமிஷனர் ஆபீசிற்கு ஷங்கர் வரும் நேரம் முன்கூட்டியே தெரியப்படுத்தப் பட்டுவிடுவதால், கீழ்த்தளத்திலேயே ரெடியாக இருக்கும் ஒரு போலீஸ்காரர், ஷங்கர் கார் வந்ததும் கதவைத் திறந்து அவரை அழைத்துக் கொண்டு 4—ஆவது மாடியில் இருக்கும் நாகஜோதியின் அறைக்கு அழைத்துச் செல்வார். சிறிது நேரம் கூட ஷங்கரைக் காக்க வைக்கமாட்டார்கள்.
ஆனால் மார்ச்.03—ஆம் தேதி கமல் வந்த போது, கீழ்த் தளத்தில் சிறிது நேரம், நாக ஜோதியின் அறைக்கு வெளியே சில நிமிடங்கள் காக்க வைத்து தான் அனுப்பினார்கள், அதுவும் கமலை போட்டோ எடுத்த பின்பு. (அக்யூஸ்டு போல) இதெல்லாம் போதாதென்று, விபத்து நடந்த இடத்திற்கு வந்து நடித்துக் காட்டச் சொன்னதுதான் கமலை டென்ஷனாக்கி, உயர்நீதி மன்றம் செல்லும் அளவுக்கு போய்விட்டது.
"நான் இந்தப் படத்தின் ஹீரோ மட்டும்தான். இது ஒரு விபத்து வழக்கு, கொலை வழக்கல்ல. என்னைப் போய் நடிச்சுக் காட்டச் சொல்லி போலீஸ் டார்ச்சர் பண்றாங்க, இதிலிருந்து எனக்கு விலக்கு அளிக்க வேண்டும்'' என தனது வக்கீல் சதீஷ் பராசரன் மூலம் மனுத் தாக்கல் செய்தார் கமல். "தேவைப்பட்டால் விசாரணைக்கு ஆஜரானால் போதும், கமல் நடித்துக் காட்டவேண்டிய அவசியமில்லை'' என உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.
"ஆக்சிடெண்ட்ல ஒருத்தர் செத்துப் போய்ட்டார்னா, அவரு குடும்பத்துல இருந்து ஒருத்தர செத்துக்காட்டி நடிச்சுக் காட்டுங்கிற கதையா இருக்கு'' என்கிறது கமல் தரப்பு. அரசியல் பகையை போலீஸ் மூலமாகத் தீர்த்துக் கொள்கிறது அரசு என்ற சந்தேகமும் கமலிடம் உள்ளது.