
கர்நாடக அரசியலில் 4 மாதத்தில் மாற்றம் ஏற்படும் என பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சிக்காவியில் நேற்று கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியானது ஆட்சிக்கு வந்ததும் இலவச திட்டங்களை நிறைவேற்றுவதாக மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்திருந்தனர். அமைச்சரவைக் கூட்டத்தில் இலவச திட்டங்களுக்கு ஒப்புதல் மட்டும் அளித்துவிட்டு, அதை செயல்படுத்திவிட்டது போல் நாடகமாடுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடனேயே கர்நாடக மாநில பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள். பழிவாங்கும் அரசியலில் காங்கிரஸ் ஈடுபடுகிறது. காங்கிரஸ் கட்சியினருக்கு பாஜகவினர் தலை வணங்கி செல்ல வேண்டும் என்ற பிரச்சினையே இல்லை.
பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட புதிய திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை நிறுத்துவதாக காங்கிரஸ் தலைவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். பல்வேறு தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் பாஜக தோல்வி அடைந்திருக்கிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும். மோடி மீண்டும் 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார். அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. கர்நாடக அரசியலில் இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் மாற்றம் ஏற்படுவது உறுதி. தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி செல்லும் பாதை சரியாக இல்லை. காங்கிரஸ் ஆட்சி நடத்தும் விதம், பதவி மோதல் காரணமாக காங்கிரஸ் ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்க வாய்ப்பில்லை" என்று பேசியுள்ளார்.