
மதுரை மாவட்டம், சிம்மக்கல் பகுதியில் தமிழகத்திலேயே பொது இடத்தில் முதல்முறையாக மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞருக்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில், 9.1/2 அடி உயரத்தில் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் மொத்த எடை சுமார் 23 டன் ஆகும்.
'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (17/02/2021) மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது இந்த கலைஞர் சிலையை அவர் திறந்து வைத்தார்.

இந்த திருவுருவச்சிலை, சிறப்புமிக்க கட்டிடக் கலைஞர்களால் அடித்தளம் அமைக்கப்பட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ளது போல் கம்பீரமான பீடம் அமைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அனைவரும் பார்த்து மகிழ்ந்து செல்லும் வகையில் கலைஞரின் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்திற்கு சென்று பெரும் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு வருவாய்த்துறையிடம் அனுமதி பெற்று பொது இடத்தில் வைக்கப்படும், இந்த திருவுருவச் சிலை, கட்சிக்குக் கிடைத்த வெற்றியாக தி.மு.க.வினர் பார்க்கின்றனர்.