மே 10, தமிழகத்தில் ‘சட்டமன்ற கதாநாயகன்’ என்று சிலாகிக்கப்பட்ட க.சுப்பு பிறந்தநாள். அவருடைய 76-வது பிறந்தநாளில் அவரை நினைவுகூர்வோம்.
தொழிற்சங்க தலைவராக இருந்த சுப்பு, 1967-ல் சி.பி.ஐ. எம்.எல்.ஏ. ஆனார். 1969-ல் திமுகவில் சேர்ந்தார். திமுக எம்.எல்.ஏ.வாக இரண்டு தடவை சட்டமன்றம் சென்றார். 1978-ல் அதிமுகவில் சேர்ந்து எம்.எல்.சி. ஆனார். எம்.ஜி.ஆர். மறைந்ததும், காங்கிரஸ், த.மா.கா. ஆகிய கட்சிகளில் இருந்துவிட்டு, 2001-ல் மீண்டும் அதிமுகவுக்கு வந்தார். 2007-ல் சட்டமன்றத்தில் கலைஞருக்கு பொன்விழா கொண்டாடிய நேரத்தில், ஜெயலலிதாவின் எண்ணத்துக்கு மாறாக ‘பொன்விழா கொண்டாட்டமெல்லாம் சரியானதுதான்..’ என்று வெளிப்படையாகப் பேசியதால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பிறகு, மீண்டும் திமுகவில் சேர்ந்தார். “சுதந்திரமாக சிந்தித்து செயல்படுபவர் என்பதால், எந்தக் கட்சியிலும் அவரால் நிலைத்திருக்க முடியவில்லை.” என்பார்கள், அவரது சகாக்களே!. ”பகைவரையும் வசீகரிக்கக்கூடிய பேச்சாற்றலும், வாதத்திறமையும் கொண்டவர் சுப்பு..” என்றார், இரங்கல் அறிக்கையில் கலைஞர்.
வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சாவளியைச் சேர்ந்த தொட்டிய நாயக்கர் சமுதாயத்திற்கு அரசின் பல சலுகைகளைப் பெற்றுத் தந்த சுப்பு, பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மனுக்கு கோட்டை கட்டுவதற்கு காரணமாக இருந்தார்.
நக்கீரன் இதழில் ‘இங்கே ஒரு ஹிட்லர்’ என்ற பரபரப்புத் தொடரை எழுதிய க.சுப்பு, ‘நக்கீரன்’ என்ற தலைப்பினை பெருந்தன்மையுடன் நமக்கு அளித்தவரும்கூட. அவரது புகழ் நீடுவாழ்க!