ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட மிஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து அனைவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில் முருகன் உள்ளிட்ட நான்கு பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை கிண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ''எனக்கு இதில் உடன்பாடு இல்லை. கொலைகாரர்களை வெளியே உலாவ விடுவது தவறு. இதன் பிறகு சமூகத்தில் கட்டுப்பாடும், ஒழுங்கும் இருக்காது. நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான தமிழர்கள் கைதிகளாக இருக்கிறார்கள். ஏன் அவர்களெல்லாம் விடுதலை செய்யப்படவில்லை? கோயம்புத்தூர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஏராளமான இஸ்லாமிய இளைஞர்கள் வழக்கு கூட பதிவு செய்யப்படாமல் இன்னும் சந்தேகத்தின் பேரிலேயே சிறையில் இருக்கிறார்கள். ஏன் அவர்களை விடுதலை செய்யவில்லை? அது என்ன இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி.. ராஜீவ்காந்தியைக் கொன்றவர்களுக்கு ஒரு நீதியா?'' என்று கேள்வி எழுப்பினார்.