மதுரை விமான நிலையத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
உங்கள் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டே வாங்கியிருக்கிறீர்கள். மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்று சொல்லும் நீங்கள் வழக்கை சந்திக்க வேண்டியதுதானே என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றனவே?
அது பொய் புகார் என்று தெரியும். அதனால் தான் நான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை பெற்றுள்ளேன். இதுதொடர்பாக நான் விவரமாக பதில் அளித்துள்ளேன். இதற்கு யாரும் பதில் சொல்லவில்லை. ஆர்.எஸ்.பாரதி ஒரு புகார் செய்தார். அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதை நான் தெளிவுப்படுத்தினேன். அதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து அமைச்சர்களும் ஜெயிலுக்கு போவார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளாரே?
அதுவரைக்கும் முன்னாள் அமைச்சர்கள் வெளியே இருப்பார்களா என்று பாருங்கள். ஏனென்றால் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் திமுக முன்னாள் அமைச்சர்கள் பல்வேறு ஊழலில் ஈடுபட்டதாக வழக்குகள் தொடரப்பட்டு நடந்து வருகிறது. அதனை மறைப்பதற்காக இப்படிப்பட்ட வழக்குகளை தொடரப்போவதாக கூறி வருகிறார். என்ன வழக்கு தொடரப்போகிறார்கள். என் மீது வழக்கு தொடர்ந்தார்கள். அந்த புகாருக்கான பதிலை சொல்லவில்லை. இந்த புகாருக்கு 26 நிமிஷம் பதில் சொன்னேன். அவர்கள் அதற்கு பதில் சொல்லவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது. ஒன்றுமே இல்லை, சரக்கு இல்லை அவர்களிடத்தில்.
ஜெயலலிதா இல்லாத காரணத்தினால் மிரட்டி பார்க்கிறார்கள். ஜெயலலிதா இல்லாத காரணத்தினால் இந்த ஆட்சிக்கு களங்கம் விளைவிக்க வேண்டும். மக்களிடத்தில் தவறான எண்ணத்தை உருவாக்க நினைக்கிறார்கள். நிச்சயம் அது நடக்காது. அதிமுக உடையும் என்று எதிர்பார்த்தார்கள் உடையவில்லை. ஆட்சி கவிழும் என்று எதிர்பார்த்தார்கள். அது நடக்கவில்லை.
தற்போது உச்சநீதிமன்றமே தனி நீதிமன்றம் அமைத்து எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. அந்த நீதிமன்றம் துவங்கப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நீதிமன்றத்தில் முதலில் ஆஜரானவர் ஸ்டாலின்தான். இவ்வாறு கூறியுள்ளார்.