மின் கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம், சொத்து வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு சீர் கேடு ஆகியவை தமிழகத்தில் ஏற்படுவதாகக் கூறி தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க சார்பில் மனித சங்கிலி போராட்டம் அக்டோபர் 8ஆம் தேதி நடத்தப்படும் என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது, “வரி விஷயத்தில் சென்னை மாநகராட்சி தூங்கிக் கொண்டிருக்கிறது. மக்களை துன்புறுத்தி அரசு கருவூலத்தை நிரப்பும் வேலையை செய்கின்றனர். தி.மு.க அரசு பொறுப்பேற்றதில் இருந்து நின்றாலும் வரி, உட்கார்ந்தாலும் வரி போடுகிறார்கள். விமான சாகச நிகழ்ச்சியின் போது பரிதாபமாக 5 பேர் உயிரிழந்தனர். 5 பேர் இறப்புக்கு வருத்தப்பட வேண்டிய நேரத்தில் பூங்காவை திறந்து வைக்கின்றனர்” எனப் பேசினார்.