மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தீபக் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி வினீத் கோத்தாரி தலைமையிலான அமர்வில், ஆகஸ்ட் 12-ல் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்காக, 24 ஆயிரம் சதுர அடி பரப்பு கொண்ட வேதா நிலையம் இல்லம் அமைந்துள்ள இடத்துக்கு 68 கோடி ரூபாய் இழப்பீடு நிர்ணயித்து, நிலம் கையகப்படுத்தும் அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின்படி, 68 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தி, வேதா நிலையம் இல்லத்தை அரசுடைமையாக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில், கையகப்படுத்தும் நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி தீபக் தரப்பிலும், இழப்பீடு நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தீபா தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை இரு நீதிபதிகள் விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில், ஆகஸ்ட் 12-ம் தேதி விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளன.