பா.ம.க. கேட்ட எண்ணிக்கைக்கு அ.தி.மு.க. ஒத்துக்கொள்ளவில்லை. உங்களுக்கு ராஜ்ய சபா சீட் ஏற்கனவே தந்துவிட்டோம் என அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தையை இறுதி செய்ய வேண்டும் என டாக்டர் ராமதாஸிடமும், அன்புமணியிடமும் பேசிக் கொண்டிருந்தது. நாங்கள் கூட்டணிக்குள் வராவிட்டால் எடப்பாடி தொகுதியிலேயே பழனிசாமி வெற்றி பெறமாட்டார் என பா.ம.க. எதிர் வாதம் பேசிக்கொண்டிருந்தது. அதன் பிறகு தொடர் பேச்சுவார்த்தையின் இறுதியாக சட்டமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாளன்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியை அனுப்பி எடப்பாடி யைச் சந்திக்க வைத்தார்கள்.
இரு தரப்புக்கும் நடந்த மரத்தான் பேச்சுவார்த்தை சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாளில் மதியம் தான் முடிவடைந்தது. அதன் பிறகு, முதலமைச்சராக எடப்பாடி தனது கடைசிப் பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துவிட்டு சபைக்குள் நுழைந்து, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டைச் சட்டமன்றத்தில் அறிவித்து, அதை கவர்னரின் கையெழுத்துக்கும் அனுப்பிய பிறகு, மறுநாள் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் என நட் சத்திர ஓட்டலில் ஒப்பந்தம் முடிவானது.
இதற்கிடையே, விஜயகாந்தின் தே.மு.தி.க. 40 தொகுதிகளைக் கேட்க அதற்கு அ.தி.மு.க. ஒற்றை இலக்க தொகுதிகளை தருவதாக பதில் சொல்லியது. நாங்கள் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் என தே.மு.தி.க.வினர் சொல்ல, அது விஜயகாந்தின் கட்சி இன்று இருப்பது, பிரேமலதாவின் கட்சி எனச் சூடாகவே பதில் சொல்லியிருக்கிறார்கள். இதற்கிடையே, விஜயகாந்தை அமைச்சர்கள் குழு ஒன்று சந்தித்து பேசியது. அவர்களிடம் வரவேண்டிய மலர்ச் செண்டுகள் பற்றியும், தொகுதிகள் பற்றியும் கடுமையாக பேசியிருக்கிறது தே.மு.தி.க தலைமை.