தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் நேற்று முதல் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட 200 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது சகோதரர் அசோக் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், அரசு ஒப்பந்ததாரர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த கிராமமான இராமேஸ்வரப்பட்டி பகுதியில் 25 இடங்களிலும், கரூர் மாவட்ட திமுக ஒன்றிய செயலாளர், கிளைச் செயலாளர் ஆகியோர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், பாலக்காடு, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மொத்தமாக 200 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பான பல்வேறு இடங்களிலும் அண்டை மாநிலங்களிலும் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான செந்தில் கார்த்திகேயன் என்பவரது வீடு மற்றும் அலுவலகங்கள், அவரது நெருங்கிய நண்பராக கூறப்படும் அரவிந்த் என்பவரது வீடு மற்றும் அவரது அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 இடங்களில் இந்த சோதனை நேற்று முதல் நடைபெற்று வருகிறது. அது இன்றும் தொடர்கிறது. சமீபத்தில் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தவர் செந்தில் கார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று அதிகாரிகள் ஆவணங்கள் சரிபார்ப்பு சோதனையில் ஈடுபட்டதாகவும் இன்றும் அந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
கோவையைப் போன்று கரூரிலும் நேற்று சோதனை நடைபெற்றது. அப்போது திமுகவினர் அங்கு குவிந்தனர். இதனால் அதிகாரிகளுக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் தள்ளுமுல்லாக மாறியதில் 4 வருமானவரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டனர். அவர்கள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அதேபோல் திமுகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிகாரிகளின் பாதுகாப்புக்காக சி.ஆர்.பி.எஃப். அதிகாரிகள் வந்துள்ளனர்.
நேற்று ஏற்பட்ட தள்ளுமுல்லின் காரணமாக இன்று கரூரில் சி.ஆர்.பி.எஃப். வீரர்களின் பாதுகாப்புடன் ஐ.டி. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது. பெரியார் நகரில் பிரேம்குமார் என்பவர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையின் போது பாதுகாப்பிற்காக 100 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் கரூரில் முகாமிட்டுள்ளனர்.