அண்மையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவும் அதிமுக நிர்வாகியும் பேசிக்கொள்வதாக செல்ஃபோன் ஆடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அந்த ஆடியோவில் பேசுவது தான் இல்லை என்று செல்லூர் ராஜு தற்போது மறுத்திருக்கிறார்.
வெளியான அந்த ஆடியோவில், பேசும் தொண்டர் ''அண்ணே நம்ம கட்சியில் ஜெயலலிதாவிற்கு பிறகு சசிகலா என்றுதானே கொண்டுவந்திருக்கோம். சீனியராக இருக்கும் நீங்கள் எல்லாம் அதனை வழிமொழிய வேண்டும் அண்ணே... உங்களை மாதிரி சீனியர் எல்லாம் விடக்கூடாது அண்ணே'' என பேச, ''அப்படித்தான்யா இருக்கு, அதெல்லாம் விடமாட்டோம். கொஞ்சம் கொஞ்சமா அடிச்சுதான் காலிபண்ணனும்'' என அந்த ஆடியோ நீளுகிறது. அண்மையில் மூத்த அதிமுக நிர்வாகி அன்வர் ராஜா நீக்கப்பட்டது, அதனைத்தொடர்ந்து உள்கட்சி தேர்தல் என அதிமுக வட்டாரம் பரபரப்பில் சிக்க, தற்பொழுது வெளியாகியுள்ள ஆடியோ மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது தொடர்பாகத் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த செல்லூர் ராஜு, ''நான் பேசியதாக ஊடங்களில் பரவி கொண்டிருக்கும் செய்தி உண்மை அல்ல. என்னைப்போல யாரோ பேச முயற்சித்துள்ளனர். அப்படி யாரிடமும் பேசவில்லை. அப்படிப் பேச வேண்டும் என்றால் ஊடகத்தின் முன்பே பேசியிருப்பேன். அதிமுக வலுவோடு இருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத சில விஷமிகள் இவ்வாறு செய்துள்ளனர்'' என்றார்.