“வாட்ச் டைம் கேட்டால் நமக்கு நல்ல நேரம் என அர்த்தம். வாட்ச் விலை கேட்டால் நமக்கு டைம் சரியில்லனு அர்த்தம்” என இயக்குநர் பேரரசு கூறியுள்ளார்.
இயக்குநரும் பாஜக நிர்வாகியுமான பேரரசு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திரைப்படத்தில் நடிகை காவி உடை அணிந்து நடித்ததால் பாஜக விமர்சனம் வைக்கிறது எனச் சொல்கிறார்கள். காவி என்பது அதை யார் அணிகிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான். அதேபோல் தமிழ்ப்படங்களிலும் காவி உடைகள் அணிந்து காட்சிகள் உள்ளன.
இதற்கு முன்னால் காவியை ஒரு நிறமாகப் பார்த்தோம். திரைப்படங்களைப் படங்களாகப் பார்த்தோம். அப்பொழுதெல்லாம் பிரச்சனை இல்லை. இப்பொழுது அரசியல் பார்வையுடன் பார்த்தால் தப்பாக தோன்றும். அதைத் தூக்கி எறிந்துவிட்டு கலைத்தன்மையுடன் பார்த்தால் தவறாகத் தெரியாது.
வாட்ச் டைம் கேட்டால் நமக்கு நல்ல நேரம் என அர்த்தம். வாட்ச் விலை கேட்டால் நமக்கு டைம் சரியில்லனு அர்த்தம். அண்ணாமலை மற்றும் பிற பாஜக தலைவர்கள் திமுக தலைவர்களின் வாட்ச் மற்றும் அதன் விலையைப் போட்டுள்ளார்கள். அவர்கள் அதற்கு பில்லை காட்டட்டும்.
எரிவாயுவைப் பொறுத்தவரை மத்திய அரசு கவனத்தில் எடுத்து அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்” எனக் கூறினார்.