நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தமிழகத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது.இதனால் அதிமுக கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.இந்த தோல்விக்கு பிறகு அதிமுகவில் ஒற்றை தலைமை, இரட்டை தலைமை பிரச்னை வெடித்தது.பின்பு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தலைமை பிரச்னை பற்றி யாரும் பேச வேண்டாம் என்று முடிவெடுத்தனர்.இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடியை தம்பிதுரை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் வரவேற்றதாக சொல்லப்படுகிறது.
அப்போது துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் முதல்வரை வரவேற்க வரவில்லை. இதனால் முதல்வருக்கும் மற்ற அதிமுக நிர்வாகிகளுக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிமுகவில் ஓபிஎஸ் அணி,இபிஎஸ் அணி என்று இன்னும் உட்கட்சி பூசல் நிலவுதாக அதிமுக தொண்டர்கள் வேதனையில் கூறிவருகின்றனர். மேலும் அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையில் யார் ஆட்சிக்கு தலைமை ஏற்பது,யார் கட்சிக்கு தலைமை ஏற்பது என்ற பிரச்னைக்கிடையில் இந்த நிகழ்வு இன்னும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.