"கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் ராஜினாமா செய்துவிட்டு என்னை வந்து சந்திக்க வேண்டும்" என அதிரடி அறிக்கை விட்டிருந்தார் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவை அடுத்து முதல் ஆளாக துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ‘தலைவர்தான் எங்களுக்கு உயிர்.. அவருக்காக உயிரையும் கொடுப்போம்’ என திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன் பேசியது சமுக வளைதளங்களில் வைரலாகிவருகிறது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் திமுக கூட்டணி 21 வார்டுகளை கைப்பற்றியது. இதில் 5வது வார்டில் போட்டியிட்ட திமுக நகர செயலாளர் ஆர்,எஸ்,பாண்டியன் அதிமுக வேட்பாளர் வேட்புமனு தள்ளுபடியானதால் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார். இந்த சூழலில் நகர்மன்றத் தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் 4ம் தேதி நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி நகராட்சியின் துணை தலைவர் பதவியை கூட்டணிக்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியது திமுக தலைமை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துணை சேர்மனுக்கான வேட்பாளராக ராமலோக ஈஸ்வரியை நிறுத்தியது.
இந்தநிலையில் 4ம் தேதி நடந்த மறைமுக தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ராமலோக ஈஸ்வரி காலையில் நடத்த தலைவருக்கான தேர்வில் கலந்துகொள்ளாததால், அதிமுகவினர் சந்தடி சாக்கில் உள்ளே புகுந்துவிட வாய்ப்பு இருப்பாதக கருதிய திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திமுக நகர செயலாளர் பாண்டியனையே துணை தலைவருக்கு பரிந்துறை செய்தனர். மாலை நடந்த மறைமுக தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்று நகராட்சியை திமுகவே தக்கவைத்தது.
இந்தநிலையில் திமுக தலைவரின் அறிவிப்பை தொடர்ந்து முதல் ஆளாக ராஜினாமா செய்திருக்கிறார் திமுக நகர செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன். மேலும் அவர் பேசிய வீடியோவில், "நகர திமுக செயலாளராகிய நான் ஒரு கருத்தை தெரிவிக்க விரும்புகிறேன். இன்று மாலை எங்களுடைய வணக்கத்திற்குரிய தலைவர், வாழ்நாள் தலைவர், வணக்கத்திற்குரிய எங்களின் மேன்மைமிகு அண்ணன் தமிழக முதல்வர் தலைவர் தளபதி அவர்கள் ஒரு அறிக்கையை கொடுத்திருக்கிறார்கள்.
கூட்டணி கட்சியினருக்கு விட்டுக்கொடுத்துள்ள இடங்களில் போட்டியிடக்கூடாது என்கிற ஒரு சாராம்சத்தை சொல்லியிருக்கிறார். அதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் அவரது உத்தரவை மீறவில்லை, இன்று காலையில் நடைபெற்ற நகராட்சித் தலைவர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ராமலோக ஈஸ்வரி பங்கு பெறவில்லை. அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராமலோக ஈஸ்வரி என்பவர் நகர் மன்றத் தேர்தலில் கலந்து கொள்ளவில்லை. அந்த ஒரு காரணத்திற்காகவும், சந்தடி சாக்கில் அதிமுக புகுந்துவிடக்கூடாது என்பதாலும், இன்று மாலை நடந்த நகர்மன்றத் துணைத் தலைவர் தேர்தலுக்காக நகர செயலாளராகிய என்னை திமுக, காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உட்பட 21 உறுப்பினர்களும் என்னை போட்டி போட சொன்னார்கள். நான் அதில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டேன்.
எங்கள் தலைவருக்கு ஒரு பங்கம் என்றால் எனக்கு இந்த பதவி முக்கியமல்ல, உயிரை கூட கொடுப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் தயாராக இருக்கிறோம். எனவே இந்த பதவியை ராஜினாமா செய்கிறேன். இந்தகடிதத்தை தலைவரிடத்தில் வழங்குவேன், அவர் எங்கு கொடுக்க சொல்கிறாரோ, அங்கு ஒப்படைப்பேன். தலைவர் என்றால் எங்களுக்கு உயிரு, தலைவருக்காக இதனை மனபூர்வமாக செய்கிறேன்" என கூறியிருக்கிறார்.
நகர செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியனின் இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.