சென்னையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று (08/07/2021) மாலை 05.00 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில், திமுகவின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில், தனது ஆதரவாளர்களுடன் டாக்டர் மகேந்திரன் திமுகவில் இணைந்தார்.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மகேந்திரனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ''மகேந்திரன் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கிறார். திராவிட பாரம்பரியத்தில் மலர்ந்த மகேந்திரன் திமுகவில் இணைந்திருப்பது மகிழ்ச்சி. தேர்தலுக்கு முன்பே வந்திருந்தால் திமுக கொங்கு மண்டலத்தில் பெரிய வெற்றியைப் பெற்றிருக்க முடியும். ஆட்சியமைக்கும் அளவிற்கு வெற்றி பெற்றிருந்தாலும் கொங்கு மண்டலத்தில் எதிர்பார்த்த வெற்றிபெறாததை எண்ணி இப்போதும் வருத்தப்படுகிறேன். கோவை, சேலம் இப்படி கொங்கு மண்டலத்தில் இருக்கும் மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவிற்கு நாம் வெற்றிபெற முடியாமல் போய்விட்டது. மகேந்திரன் போன்றோர் முன்கூட்டியே வந்திருந்தால், திமுகவில் சேர்ந்திருந்தால் கவலை குறைந்திருக்கும். சரி இப்பொழுது ஒன்றும் குறைந்து போய்விடவில்லை'' என்றார்.