நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ள நிலையில், தனக்கு எந்தவிதமான பயமும் இல்லை என ம.த.ஜ. தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சியும் தனிப் பெரும்பான்மையைப் பெற்றிருக்காத நிலையில், ஆளுநர் வஜுபாய் பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்தார். மேலும், பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு 15 நாட்கள் அவகாசமும் அளித்திருந்தார். ஆனால், எதிர்க்கட்சிகளின் முயற்சியால்கடந்த 19ஆம் தேதியே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அன்றைய தினம் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு விழா நிறைவடைந்தவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், 13 பக்க உரையை உருக்கமாக பேசிய முதல்வர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். வெறும் 56 மணிநேரமே முதல்வராக இருந்த எடியூரப்பா ஆட்சியமைக்க போதுமான 111 எம்.எல்.ஏ.க்கள் இல்லாததை உணர்ந்து அந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதையடுத்து, கடந்த மே 23ஆம் தேதி மாலை ம.த.ஜ. மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் குமாரசாமி கர்நாடக மாநிலத்தின் 24ஆவது முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில், இன்று கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. இதுகுறித்து பேசிய குமாரசாமி, ‘எனக்கு எந்தவிதமான பயமும் இல்லை. நான் எந்தத் தடங்கலும் இன்றி சுலபமாக வெற்றிபெறுவேன்’ எனத் தெரிவித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக கர்நாடக சட்டசபைக்கான சபாநாயகர் தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.