துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, மேகதாது அணை கட்ட தேனியில் இருந்து மணல் அனுப்புவதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியுள்ளார். இது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். தேர்தல் பிரச்சாரத்தில் திமுக கூறும் பொய்யான குற்றச்சாட்டுகளை மக்கள் நம்ப மாட்டார்கள். எட்டு வழிச்சாலை விவகாரத்தில் முதலமைச்சரின் நிலைப்பாடே அதிமுகவின் நிலைப்பாடு.
தேனி பாராளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் என் மீது வைக்கும் குற்றச்சாட்டிற்கு தகுந்த ஆதாரங்களை தர வேண்டும். இல்லையென்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். முதல்படியாக உயர்நீதிமன்றம் செல்வோம். தேவைப்பட்டால் உச்சநீதிமன்றம் செல்வோம்.
22 தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். எந்தக் காலத்திலும் திமுக - காங்கிரஸ் கூட்டணியை மக்கள் நம்ப மாட்டார்கள். தவறான தகவல்களை பரப்பும் திமுக தலைவர் ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும்.
வாரிசு அரசியல் கேட்கிறீர்கள். வாரிசு அரசியல் என்பது தகுதியும் திறமையும் மக்களின் நன்மதிப்பும் பெற்றிருந்தால் வாரிசாக இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி அவர்கள் அரசியலில் நிலைத்திருப்பார்கள். மக்களின் செல்வாக்கை பெறவில்லை என்றால் அவர்களுக்கு அரசியலில் இடமில்லை என்றார்.