தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகள், ஒருபுறம் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள். மறுபுறம் இரு கட்சியின் முதல்வர் வேட்பாளர்களும் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
கடந்த 2016ஆம் அண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டன. வரும் சட்டமன்றத் தேர்தல் தேதி மற்றும் கூட்டணி குறித்து இன்னும் அதிகாரபூர்வ முடிவுகள் வெளிவராததால், கூட்டணி கட்சிகள் போட்டியிட வேண்டிய சின்னம் குறித்தான கருத்துக்களை இரண்டு கட்சிகளுமே தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகள் தி.மு.க சின்னமான உதயசூரியனின் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என நிர்பந்திப்பதாக சொல்லப்பட்டுவந்தது.
தற்போது தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்துவரும் கட்சிகளான ம.தி.மு.க., வி.சி.க. உள்ளிட்ட கட்சிகள் தனி சின்னத்தில் சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்போம் எனத் தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ள அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், “கூட்டணிக் கட்சிகளை தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கவில்லை. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கிறோம் என்பது கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த செய்யும் சதி; மக்கள் மனதில் இடம்பெற்ற ஒரு சின்னத்தில் போட்டியிட கூட்டணி கட்சி விரும்பினால் அதை வழங்குவது கடமை. அண்ணா தலைமையில் நடந்த தேர்தலின்போதே சில கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டிருக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.