தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஓபிஎஸ் அணியினர் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று தர்மபுரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்கள் அணியின் நோக்கம். ஆனால் எடப்பாடி பழனிசாமி தான் மட்டும் தலைமை பொறுப்பு வகிக்க வேண்டும். தனக்கே கட்சியை உரித்தாக்கி கொள்ள வேண்டும் என திட்டமிட்டு அதன்படி நடந்து வருகிறார். நாங்கள் கட்சியை விட்டுக் கொடுக்க மாட்டோம். இன்னும் 20 நாளில் அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் எங்கள் பக்கம் வரும்.
சாதாரண அமைச்சராக இருந்த போது எடப்பாடி பழனிசாமி ஞாபகத்தோடு இருந்தார். ஆனால் முதலமைச்சரான பிறகு அவருக்கு புத்தி பேதலித்து விட்டது. அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என நீதிமன்றம் கூறவில்லை. நாங்கள் கொடியை கட்டுவோம். நாங்கள் வழக்கை தொடுப்போம். அந்த வழக்கை எடப்பாடி பழனிசாமி அணியினர் சந்திக்கட்டும். நாங்களும் வழக்கை சந்திக்க தயாராக உள்ளோம்.
சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை எடப்பாடி பழனிசாமியும் அவரது அணியினரும் மைனஸ் என்கின்றனர். ஆனால், மைனசும் மைனசும் சேர்ந்தால் தான் பிளஸ் என்பதை நாங்கள் நிரூபிப்போம். என்னை பற்றி விமர்சனம் செய்யும் முன்னாள் அமைச்சர் காமராஜ் உண்மையான அதிமுகக்காரர் கிடையாது. டிடிவி தினகரன் வீட்டில் காமராஜ் வேலை செய்தவர். எங்களை பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை. அதிமுகவை பற்றியோ என்னை பற்றியோ அரசியல் பற்றியோ ஒரே மேடையில் விவாதிக்க நான் தயார்" என்று பேசினார்.