தொழிலர்கள் அதிகம் நிரம்பிய ஒருநகரம் வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம். இந்த நகரத்தில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இதில் 21 வார்டுகளில் திமுக வெற்றி பெற்று பெரும் மெஜாரிட்டியில் உள்ளது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ், மதிமுக தலா ஓரிடத்தில் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 10 இடங்களிலும், பாஜக ஓரிடத்திலும் சுயேட்சை இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளார்கள்.
நகரமன்றத் தலைவர் பதவி, துணைத் தலைவர் பதவி திமுகவுக்கே என முடிவாகியுள்ளது. இந்நிலையில், திமுக நகர பொறுப்பாளரான கவுன்சிலர் சௌந்தர்ராஜன், அரசு, கட்சியில் சீனியரான கோவிந்தராஜ், கோபாலகிருஷ்ணன் என நான்கு பேர் போட்டியில் உள்ளனர்.
திமுக நகர பொறுப்பாளர் சௌந்தர்ராஜன் மதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர். நகரமன்றத் துணை தலைவராக கடந்த காலத்தில் இருந்துள்ளார். திமுக மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏவின் பள்ளிக்கால நண்பர் என்பதால் போட்டியில் முன்னிலையில் நிற்கிறார்.
லாட்டரி கோபால் என்கிற கோபாலகிருஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன் வேலூர் எம்.பி கதிர் ஆனந்தை சந்தித்து சேர்மன் பதவி தனக்கு தரவேண்டும் என தேர்தலுக்கு முன்பே வலியுறுத்தினார். வேலூர் மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ, அவருக்கு தரமுடியாது என உறுதியாக நின்றதால் மாவட்ட செயலாளர், வேலூர் எம்.பி இடையே வார்த்தை மோதல் நடந்தது. கோபாலகிருஷ்ணன் திமுகவில் தனக்கு ஆதரவான கவுன்சிலர்களை அணி திரட்ட துவங்கிய அதேநேரத்தில் அதிமுக கவுன்சிலர்களோடும் பேசிக்கொண்டு இருக்கிறார்.
கட்சியின் சீனியரும் பாரம்பரிய கட்சியிக்காரருமான கோவிந்தராஜ் முயற்சி செய்கிறார். சேர்மனாக நிறுத்தினால் செலவு செய்கிறேன் என்கிறார். நெசவாளர் அணி துணை அமைப்பாளராகவுள்ள கவுன்சிலர் அரசு முயற்சி செய்கிறார். அவர் மீது வேறுசில மோசமான குற்றச்சாட்டுகள் கட்சி வட்டாரத்தில் இருப்பதால் அவரின் பெயரை தொடக்கத்திலேயே கிள்ளி எரிந்துள்ளனர் மாவட்ட நிர்வாகிகள்.
அதேபோல் மகளிரணியைச் சேர்ந்தவரும், முன்னாள் நகரமன்ற தலைவியாகவும் இருந்த புவியரசிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துவருகின்றனர். இப்போது குடியாத்தம் நகர மன்ற தலைவராகப்போகிறவர் எம்.பி ஆதரவு நபரா? எம்.எல்.ஏ ஆதரவு நபரா என்கிற கேள்வி பெரியதாக உள்ளது.