
“இளைஞர்களைச் சீரழிக்கும் வகையில் தானியங்கி மூலம் மதுபான விற்பனையைத் துவக்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. முதலமைச்சர் மக்களைப் பற்றி கொஞ்சம் கூட அக்கறை கொள்ளாமல் வருவாயை மட்டுமே கருத்தில்கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பது வெட்கக்கேடானது” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசு, திருமண மண்டபத்திலும், விளையாட்டுத் திடல்களிலும் மதுபானம் அருந்தலாம் என்று அரசாணை வெளியிட்டதைத் தொடர்ந்து, சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் டாஸ்மாக் கடைக்கு தானியங்கி மது விற்பனை மையம், அதாவது இயந்திரம் மூலம் மது வகைகளை விற்பனை செய்வதற்கான தானியங்கி இயந்திரம் அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோன்ற இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் வந்துள்ள செய்திகள், பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் நலனையோ, இளைஞர்களின் எதிர்காலத்தையோ, தமிழ் நாட்டின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டையோ கருத்தில் கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக இந்த திமுக அரசின் முதலமைச்சர் மக்களைப் பற்றி கொஞ்சம்கூட அக்கறை கொள்ளாமல் வருவாயை மட்டுமே கருத்தில்கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பது வெட்கக்கேடானது. நவீனமயமாகி வரும் கல்வித் துறை, சுகாதாரத் துறைகளில் கூட இதுவரை எந்த ஒரு நவீன திட்டத்தையும் இந்த அரசு கொண்டு வந்ததாகத் தெரியவில்லை.
கொலைக் களமாக மாறிவரும் தமிழகத்தில், மதுவால் ஏற்படும் மரணங்களைப் பெருக்கி, தன் அரசின் மற்றும் தனிப்பட்ட கஜானாவை நிரப்ப, மக்களைக் குறிவைத்து திட்டம் தீட்டி செயல்படும் இந்த அரசை, அனைத்திந்திய அண்ணா திராவிட கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்தை இந்த அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.