தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கான அவகாசம் இன்று (04/04/2021) இரவு 07.00 மணியுடன் முடிவடைவதால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளரும், தனது மகனுமான உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (04/04/2021) பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின், "தோல்வி பயத்தால் அ.தி.மு.க. தலைவர்கள் உளறி வருகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சிக்கு தக்க பதிலடி தர மக்கள் தயாராக இருக்கிறார்கள். உதயநிதிக்காக நான் பரப்புரைச் செய்யும் போது கலைஞர் எனக்காக வாக்குச் சேகரித்த நினைவுகள் வருகிறது. வெற்றியைத் தடுக்கும் வகையில் தி.மு.க. மீது குறைக்கூறி பத்திரிகைகளில் அ.தி.மு.க. விளம்பரம் செய்துள்ளது. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.வினர் செய்த குற்றங்கள் குறித்து எந்த விளம்பரமும் இல்லை.
விளம்பரம் மூலம் மக்களைத் திசைத் திருப்ப முடியாது; 6- ஆம் தேதி மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். தி.மு.க.வை அச்சுறுத்தவே, என்னுடைய மகள் வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். தி.மு.க.வினரை அச்சுறுத்தித் தேர்தலில் வெற்றியடைய பா.ஜ.க. முயற்சிக்கிறது; ஆனால் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க. வெற்றிப் பெறாது. மகள் வீட்டில் ரெய்டு நடத்தியவர்கள் இன்னும் 25 சீட் தி.மு.க.வுக்கு அதிகம் கிடைக்கும் என கூறினர். உதயநிதியை வெற்றிப் பெற வைக்க வேண்டும்". இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினர்.