Skip to main content

‘ஆளுநரோடு சண்டை; மத்திய அரசோடு சச்சரவு’ - அமைச்சரவை மாற்றம் குறித்து ஆர்.பி.உதயகுமார்

Published on 12/05/2023 | Edited on 12/05/2023

 

 'Fight with the governor; Argument with the central government - RB Udayakumar on cabinet reshuffle

 

தமிழக அமைச்சரவையில் புதிதாக டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். அதேபோல் சில அமைச்சர்களின் துறைகளும் மாற்றியமைக்கப்பட்டிருந்தது.

 

இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''மக்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு திமுகவை ஆட்சியில் அமர்த்தினார்கள். அந்த எதிர்பார்ப்பு இந்த இரண்டு ஆண்டுக் காலத்தில் ஒன்று கூட நிறைவேறாமல் போய்விட்டது. நீட் தேர்வு ரத்து நிறைவேறும் என்று மாணவர்கள் எதிர்பார்த்தார்கள். திமுக சொன்ன பொய்யை நம்பி அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு ஏதோ ஒரு விதத்தில் காரணமாக இருந்தார்கள். அரசு ஊழியர்கள் பென்ஷன் திட்டம் கிடைத்துவிடும், மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி கிடைத்துவிடும் என்று அவர்களை நம்ப வைத்தார்கள்.

 

நிவாரணங்களை வழங்குகிறோம் என்று சொல்லி விவசாயிகளை நம்ப வைத்தார்கள். கல்விக்கடனை ரத்து செய்வோம் என மாணவர்களை நம்ப வைத்தார்கள். அனைத்து மகளிருக்கும் உதவித்தொகை, ஊக்கத்தொகை தருகிறோம் என மகளிரையும் ஏமாற்றினார்கள். ஆனால் ஆட்சிப்பொறுப்பை ஏற்றதற்கு பிறகு புதிய திட்டங்களை அறிவிக்காமல், 520 வாக்குறுதிகளை ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும் முடக்கி வைத்திருந்தார்கள்.

 

இந்த இரண்டு ஆண்டுகளிலேயே அரசு 100% தோல்வியுற்ற அரசாக மாறிவிட்டது. சண்டை சச்சரவுகள், ஆளுநரோடு மோதல், மத்திய அரசோடு மோதல், நிதி பெற முடியாத நிலை, நிர்வாகக் குளறுபடி. இப்படி ஒட்டுமொத்த தோல்வி அரசாக திமுக மாறிவிட்டது. முக்கியத் துறையான நிதித்துறை அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததை போல் வெளியான ஆடியோ அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதை திசை மாற்றுவதற்கு அமைச்சர் விடுவிப்பு, அமைச்சர் சேர்ப்பு, இலாகா மாற்றம் என்று ஒரு பரபரப்பு செய்தியை உருவாக்கி புதிய அமைச்சரவை வடிவமைத்துக் கொண்ட ஒரு உருவகத்தை உருவாக்க முயற்சி செய்திருக்கிறார்கள். இந்த முயற்சி மக்களிடம் எடுபடாது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்