முதல்வரின் பிறந்தநாளுக்கு புதுவிதமாக பரிசுகளை கொடுத்தவர்களையும் புதுமையாக வந்தவர்களையும் நக்கீரன் யுடியூப் சேனல் சார்பாக சந்தித்தோம். பரிசுகளுக்கான காரணத்தையும் தங்களது தோற்றம் குறித்த காரணத்தையும் பகிர்ந்து கொண்டனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் இன்று. அவருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்தைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களைச் சந்தித்து அவர்களது வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டதோடு நன்றியும் தெரிவித்தார். அங்கு வந்திருந்த தொண்டர்களுக்கு மஞ்சப் பையில் மரக்கன்றுகள் வைத்து வழங்கப்பட்டது. விவசாய சங்கத்தின் சார்பில் ஆட்டுக்குட்டி ஒன்றும் அதேபோல் திமுக தொண்டர்கள் சார்பில் ஒட்டகம் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது. வந்திருந்தவர்கள் சால்வை, புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்களை முதல்வரிடம் வழங்கி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஒட்டகம் வழங்கியவர் நக்கீரனுக்காக அளித்த பேட்டியில், “ஒட்டகத்தை முதல்வரிடம் பரிசாக கொடுத்துவிட்டேன். தொடர்ந்து ராஜ குதிரை, ஜல்லிக்கட்டு காளை, வரையாடு, மயில், புறா இப்பொழுது ஒட்டகம். தொடர்ந்து உயிரினங்களைத் தான் பரிசாக கொடுத்து வருகிறேன். இந்த ஒட்டகத்திற்கு இரண்டு வயது ஆகிறது. முதல்வர் மிகவும் சந்தோசப்பட்டார்” என்றார்.
பேனா சின்னத்தை பரிசாக வழங்கியவர் நக்கீரன் யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “5 அடி உயரம் கொண்டது இந்த பேனா சின்னம். 21 ஆயிரம் செலவு ஆயிற்று. நாங்கள் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் இருந்து வந்துள்ளோம். கலைஞர் தமிழகத்திற்கு எத்தனையோ சாதனைகளை செய்துள்ளார். தமிழ்நாடு இந்த அளவு வளர்ச்சி அடைந்துள்ளதற்கு காரணம் கலைஞர்” என்றார்.
நாட்டுப்புற கலைஞர் வேடத்தில் இருந்த ஒருவர் பேசும்போது, “திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் இருந்து வந்துள்ளோம். நாங்கள் நாட்டுப்புற கலையைச் சேர்ந்தவர்கள். நாட்டுப்புற கலையின் மூலமாக எண்ணற்ற சமூக விழிப்புணர்வு கட்சி விழிப்புணர்வு போன்றவற்றை நாங்கள் மாவட்டம் முழுவதும் நடத்திக் கொண்டுள்ளோம். கொரோனா காலத்தில் நான்காயிரம் கொடுத்தார்கள். அதற்கெல்லாம் நன்றிக் கடன்பட்டு வாழ்த்துகளை சொல்ல வந்தோம். கலைக்குழுவில் உள்ள அத்தனை பேரும் முதல்வரை சந்தித்தோம். ‘வந்ததற்கு மகிழ்ச்சி பத்திரமாக வீடு போய் சேருங்கள். கழகம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு நீங்களும் முக்கியம்’ என முதல்வர் சொன்னார். நாட்டுப்புற கலைக்கு ஏற்கனவே நாட்டுப்புற வாரியத்தை அமைத்துக் கொடுத்துவிட்டார்கள். வாரியத்தில் இருப்பவர்களுக்கு பென்சன் கொடுத்துவிட்டார்கள். வாரியத்தில் இருக்கும் தகுதி வாய்ந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருது கேட்டுள்ளோம். ஏற்பாடு செய்கிறோம் எனச் சொல்லியுள்ளார்கள்” என்றார்.
பெரியார் போல் இருந்த ஒருவர் பேசுகையில், “எப்பொழுதும் நான் பெரியார் கொள்கை உடையவன். திமுகவை சார்ந்தவன். எப்பொழுதும் திமுகவையும் திகவையும் விட்டுக் கொடுக்கமாட்டேன். எப்போதும் இப்படித்தான் இருப்பேன். 10 வருடமாக இந்த தோற்றத்தில் இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே பெரியாரிய சிந்தனைகளை உடையவன். பெரியார் 95 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் பொழுது அவரைப் பார்த்தேன். அதிலிருந்து இப்படித்தான் இருக்கிறேன்” எனக் கூறினார்.