Skip to main content

“எதிர்க்கட்சித் தலைவர் சந்தேகப் பேர்வழியாக இருக்கிறார்..” - எடப்பாடி பழனிசாமி!

Published on 07/01/2021 | Edited on 07/01/2021

 

Edappadi palanisamy about MK stalin in erode election campaign

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று பவானி, அந்தியூர், சத்தியமங்கலம், கோபி உட்பட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். இதைத் தொடர்ந்து இன்று 7ஆம் தேதி வியாழக்கிழமை, மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காலை 9 மணிக்கு ஈரோடு  வந்தார்.   


கருங்கல்பாளையம் காவிரி கரையில், மாவட்ட அ.தி.மு.க சார்பில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், தங்கமணி, எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, சிவசுப்ரமணி ஆகியோர் வரவேற்பு கொடுத்தனர். பின்னர் பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த பாசறை கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் வீரப்பன்சத்திரம் பகுதியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “ஜெயலலிதா மறைவிற்குப் பின் நடக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது. எனக்கு பின்பும் நூற்றாண்டுக் காலம் அ.தி.மு.க., ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் என சட்டமன்றத்தில் ஜெயலலிதா சூளுரைத்தார். அவர் மறைந்தாலும், அவர் ஆற்றிய பணி இன்னும் இந்த மண்ணில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற இருபெரும் தலைவர்கள் நாட்டுக்காக, பிறந்து சேவை செய்தனர். அவர்கள் வழியில் எனது அரசு செயல்பட்டு வருகிறது.

 

இன்றைக்கு வேண்டுமென்றே திட்டமிட்டு தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தினமும் பொய் அறிக்கை வெளியிட்டு, அரசின் மீது பழி சொல்லியும், அமைச்சர் மீது குறை சொல்லியும் அவதூறு பேசுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.  இந்தத் தேர்தல் மூலம் அவரை நிராகரித்து அ.தி.மு.க. வெற்றிக்கொடி நாட்ட வேண்டும்.


தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசுவது அத்தனையும் பொய். இம்மியளவும் கூட உண்மை இல்லை. அவர்கள் ஆட்சியில் அமைச்சராக இருந்த 13 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவருகிறது. அதை மறைப்பதற்காக, வேண்டுமென்றே திட்டமிட்டு, ஆட்சி மீதும், அமைச்சர்கள் மீதும் வீண்பழி சுமத்திவருகின்றார். திட்டமிட்டு அரசியல் சூழ்ச்சி செய்து, அரசியல் நாடகத்தை ஸ்டாலின் அரங்கேற்றி வருகிறார். 


அ.தி.மு.க. ஆலமரம் போன்றது. மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களைக் கொடுக்கும் கட்சி. ஈரோடு மாநகரில் ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். ஏழைகள் மருத்துவ சிகிச்சை பெற தொடங்கப்பட்ட மினி கிளினிக் திட்டத்தை நாடே போற்றுகிறது. ஆனால், ஸ்டாலின் மட்டும் குறை கண்டுபிடிக்கிறார். இதில் என்ன குறை, சந்தேகம் அவருக்கு வந்தது எனத் தெரியவில்லை. எதிர்க்கட்சித்தலைவர் எதைத்தொட்டாலும் சந்தேகப் பேர்வழியாக இருக்கிறார். 

 

cnc

 

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 41 சதவீத மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களில் கடந்த ஆண்டு 6 இடங்கள் மட்டுமே மருத்துவக் கல்வி கிடைத்தது. நானும் கிராமத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் படித்தவன் என்ற முறையில், அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வி படிக்க 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கினேன். இதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் 313 பேர் எம்.பி.பி.எஸ். படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகள் மூலம் 130 பேர் சேருவார்கள். இதன்மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் 443 பேர் மருத்துவக் கல்வி படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கிறது" எனப் பேசினார். 

 

தொடர்ந்து சித்தோடு, ஊத்துக்குளி, பெருந்துறை பகுதிகளில் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, மாலையில் சுதந்திரப் போராட்டத் தியாகி தீரன் சின்னமலையின் பிறப்பிடமான ஓடாநிலை கிராமத்திற்குச் சென்று சின்னமலையின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 
 

 

 

சார்ந்த செய்திகள்