மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை தமிழகத்தில் தொடங்கிய தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் சு.திருநாவுக்கரசர் தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள தீயத்தூர் கிராமத்தில் வாக்கு பதிவு செய்தார். இது ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதில் உள்ள கிராமம். காலையில் தொடங்கிய வாக்குப் பதிவு 9.15 மணி வரை சுமார் 127 வாக்குகள் பதிவான நிலையில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதால் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.
அங்கு முன்னாள் திமுக எம் எல் ஏ உதயம் சண்முகம் நேரில் வந்து இயந்திரக் கோளாரை பழுது நீக்க வேண்டும் என்றார். இதனால் வாக்குப்பதிவுக்காக வந்த வாக்காளர்கள் காத்திருந்தனர். மேலும் இந்த மையத்தில் வாக்கு பதிவுக்கு வந்த வேட்பாளர் திருநாவுக்கரசர் இயந்திரக் கோளாறு என்றதும் இயந்திரம் சீரமைக்கும் வரை காத்திருப்பதாக வாக்குச் சாடியில் இருந்து வெளியேறினார். பின்னர் ஒரு மணி நேரம் காத்திருந்து வாக்களித்தார் திருநாவுக்கரசர்.