தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாக பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். விஸ்வகர்மா திட்டத்தை கொண்டு வந்திருக்கின்ற நரேந்திர மோடி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைய வேண்டும். அடைவார்'' என்று கூறினார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகத் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் ஒழிப்பு பற்றிய பேச்சைக் கண்டு பாஜக பொங்கி குதிக்கிறது. புரண்டு புலம்புகிறது. சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று இளைய சமுதாயத்தின் குரலாக உதயநிதி பேசி இருக்கிறார். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று புத்தர், இராமானுஜர், வள்ளலார் வட இந்தியாவில் ஜோதிராவ் பூலே, அம்பேத்கர் உள்ளிட்டவர்கள் பேசினார்கள். அதேபோல், தமிழ்நாட்டில் பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் ஆகியோர் பேசினார்கள். இது காலம் காலமாக நடக்கும் மனித குலத்திற்கான போராட்டம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்திரா காந்தி, சனாதனத்தால் கலவரத்தை உருவாக்கி நாட்டை துண்டாடும் நோக்கத்தில் செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தடை செய்தார்.
சனாதனத்தை ஆதரித்து ஆளுநர் ஆர்.என். ரவி பேசலாம். பா.ஜ.க.வினர் பேசலாம். ஆனால் சனாதனத்தை எதிர்த்து அமைச்சர் உதயநிதி பேசினால் மட்டும் தவறா? சனாதனம் என்பது வருணாசிரம தருமத்தை நிலைநாட்டத் துடிக்கும். மக்களை வேறுபடுத்தி ஊருக்கு வெளியே குடியிருக்கச் சொல்லும். சாதி உயர்வு தாழ்வைக் கற்பிக்கும். குழந்தைத் திருமணத்தை ஆதரிக்கும். கணவனை இழந்தால் பெண்களை உடன் கட்டை ஏற வேண்டும் எனக் கூறும். மக்களைத் தாழ்த்தி கோயிலுக்குள் செல்ல விடாமல் தடுக்கும். இப்படிப்பட்ட மனித குலத்தின் சமத்துவத்திற்கு எதிரான சனாதனத்தை ஒழிக்க வேண்டும் எனப் பேசுவது தவறா? சனாதனத்தை எதிர்த்து பேசியதால் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். சனாதனத்தை எதிர்த்து பெரும் பிரச்சாரம் செய்ததால் பெரியார் மீது எண்ணற்ற வழக்குகள் போட்டனர்.
சனாதனத்தை எதிர்த்தார் என்பதற்காகவே காமராஜரை டெல்லி வீட்டில் வைத்து தீயிட்டு எரிக்க முயன்றனர். அன்றைக்குத் தோற்றுப் போனவர்கள் இன்றைக்கு கூட்டணியின் பலத்தைக் கண்டு தோல்வி பயம் துரத்துகிறது என்பதால், சனாதனத்தை சாக்கு வைத்து மக்களை திசைதிருப்பத் துடிக்கிறார்கள். சனாதனம் சமூகத்திற்கு, சமூக நீதிக்கு எவ்வளவு கேடானது என்பதை சாமானிய மக்களை புரிந்து கொள்ள வழிவகுக்கும் வகையில் பேசிய அமைச்சர் உதயநிதிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். அவரது சனாதன எதிர்ப்பு பயணத்தில் நாங்கள் உடன் இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.