ஊரடங்கை கட்டுப்பாடுகளோடு தளர்த்த வேண்டும் என்றும், தனக்குத் தானே பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ள மக்கள் தயாராக வேண்டும் என்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 ஆம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு தேவையா, இல்லையா என்ற அரசாங்கத்தினுடைய தடுமாற்றம் வெளியில் தெரிகிறது. ஊரடங்கினால் மட்டும் கரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது என்பது உலகமே அறிந்த உண்மை. ஊரடங்கு நேரத்தில் விதிக்கப்படும் சில கட்டுப்பாடுகளை மக்கள் பயத்தில் மீறுவதால் தான் தமிழகத்திலும் நோய் பரவல் அதிகமாகியிருக்கிறது. சென்னையில் ஊரடங்குக்குள் ஊரடங்கை போட்டதால் அத்தியாவசிய காய்கறிகளை குறுகிய காலத்தில் வாங்க வேண்டிய அவசியம் மக்களுக்கு ஏற்பட்டது. அதனால்தான் கோயம்பேட்டில் கூட்டம் கூடியது. அதன் விளைவாகதான் தமிழகத்தில் நோய் பாதிப்பு எண்ணிக்கை தினசரி கூடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சென்னையில் கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நோய் பரவல் ஊரடங்கை தளர்த்தியதால் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஊரடங்கை தளர்த்திவிட்டு மக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறார்களா என்பதை அரசு கடுமையாக கவனிக்க வேண்டும்.
1.பெரிய வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், கல்யாண மண்டபங்கள், பள்ளி, கல்லூரிகள் தவிர மற்ற செயல்பாடுகள் முழுமையாக கட்டுப்பாடுகளோடு அனுமதிக்கப்பட வேண்டும்.
2.மாவட்ட எல்லைகள் மக்கள் போக்குவரத்துக்கு திறக்கப்பட வேண்டும்.
3.வேறு மாநிலங்களிலிருந்து வருகின்ற பயணிகள் அவரவர் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்து தனிமைப்படுத்த வேண்டும்.
4. தொழிற்சாலைகளும், வியாபார தலங்களும் திறக்கப்பட்டு இருந்தாலும் பொது போக்குவரத்து இல்லாத காரணத்தால் எதிர்பார்த்ததுபோல பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் கட்டுப்பாடுகளோடு பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட வேண்டும்.
5. விவசாய விளைப்பொருட்களையும் சிறு தொழில் உற்பத்திப் பொருட்களையும் வாங்க வருகின்ற மற்ற மாவட்டம், மற்ற மாநிலத்தவர்கள் வர முடியாத காரணத்தால் விற்பனையின்றி பொருட்கள் தேக்கம் அடைந்திருக்கின்றன. அதை கருத்தில் கொண்டு மாவட்ட மாநில எல்லைகள் கட்டுப்பாடுகளோடு திறக்கப்பட வேண்டும்.
6. முக கவசம் அணிவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
குறிப்பிடப்பட்ட தளர்வுகளை கொடுத்து பொருளாதார நடவடிக்கைகள் வேகப்படுத்தப் படாவிட்டால் வேலையின்மையும், வருமானமின்மையும் தமிழக அரசுக்கு சவாலாக அமையும். ஊரடங்கு தளர்வால் மக்கள் அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் அஜாக்கிரதையாக நடந்து கொண்டால் நோய் பரவல் அதிகமாகலாம். அதனால் மக்கள் அரசின் அறிவுரைகளை பின்பற்றுவது தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். அவரவர் உயிரை பாதுகாத்துக்கொள்ள ஒவ்வொரு தனிமனிதனும் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சட்டத்தின் வாயிலாக அரசு அதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.