அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் இருக்கக் கூடிய அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், காமராஜ், தங்கமணி, பொன்னையன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
அதிமுக தற்போது இரு தரப்பாக இருக்கும் நிலையில் மொத்தம் இருக்கக்கூடிய 75 மாவட்ட செயலாளர்களில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள 69 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். 61 பழனிசாமி சட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அதிமுகவின் பொன்விழா ஆண்டினை முன்னிட்டு தமிழகம் எங்கும் பொதுக்கூட்டம் நடத்த இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் 17ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவின் துணை சட்டப்பேரவைத் தலைவராக இருந்த ஓபிஎஸ் மற்றும் துணை கொறடாவாக இருந்த மனோஜ் பாண்டியனையும் நீக்கி புதிய துணை சட்டப்பேரவை தலைவராக ஆர்.பி.உதயகுமாரையும் துணை கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் நியமித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டப்பேரவைக்கு கடிதம் வழங்கி இருந்தது. இது குறித்து சபாநாயகர் முடிவு ஏதும் எடுக்காத நிலையில் அது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.