Skip to main content

‘நாடாளுமன்றத்திற்கு கட்டாயம் வரவேண்டும்’ - திமுக எம்.பி.க்களுக்கு உத்தரவு!

Published on 13/12/2024 | Edited on 13/12/2024
Must come to Parliament DMK MP ordered

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. எதிர்க்கட்சிகள் சார்பில் அதானி மீதான குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே பிரதமர் மோடி தலைமையில் நேற்று (12-12-24) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை, நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்பது தான் மத்திய பா.ஜ.க அரசின் கனவுத் திட்டம். அந்த திட்டத்தை அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அமல்படுத்தியே ஆகவேண்டும் என்று பா.ஜ.க அரசு தீவிர முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தான் திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு கட்டாயம் வரவேண்டும் என அக்கட்சியின் கொறடா உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் முக்கியமான மசோதா மீது விவாதம் நடைபெற இருப்பதால், மக்களவை மற்றும் மாநிலங்களவைச் சேர்ந்த திமுக எம்.பி.க்கள் இன்றும் (13.12.2024), நாளையும் (14.12.2024) நாடாளுமன்றத்திற்குக் கட்டாயம் வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்