தமிழகம் முழுவதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு என்ற பெயரில் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் எடப்பாடி பழனிசாமி இன்று நாமக்கல்லில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகிறார்.
இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 30, 31 ஆகிய இரு தேதிகளில் தமிழக முதல்வர் திருச்சிக்கு வருகைதந்து கள ஆய்வு செய்யவுள்ளதாக அறிவித்து உள்ளார். இதற்காக திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மாநகர் அதிமுகவின் பொறுப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகள், பிரமுகர்கள் எனப் பலரையும் நாமக்கல்லுக்கு அழைத்த அமைச்சர் தங்கமணி, முதல்வரின் வருகை குறித்து ஒரு சில தகவல்களையும் பரிமாறி இருக்கிறார்.
இதில், முதல்வரின் வருகையை மிகப் பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் செய்து கொடுக்க வேண்டும் என்றும், கட்சிக்குள் இருக்கக்கூடிய எந்த உட்கட்சிப் பூசல்களையும் வெளியே தெரியாத வண்ணம் ஒற்றுமையாக இருந்து முதல்வர் செல்லுமிடமெல்லாம் நல்ல வரவேற்பை வழங்க வேண்டுமென்றும் கேட்டிருக்கிறார்.
பூசல்களும் வெளியே தெரியாதபடி மிகக் கவனமாக இருந்து, இந்த இரண்டு நாள் சுற்றுப் பயணத்தை முடிக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார். அதற்கு இன்று முதலே தயாராகிக் கொள்ள வேண்டுமென்றும் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார் அமைச்சர் தங்கமணி.