மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜல் சக்தி அபியான் அனைவருக்குமான குடிநீர் வழங்கும் திட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்க தலா ரூபாய் 1000 வீதம் முன்வைப்பு தொகையாகவும் குடியிருப்புகளுக்கு வெளியில் கை பம்புகள் மூலம் அளவீட்டு முறையில் குடிநீர் வழங்குவதற்காக வாடகையாக மாதந்தோறும் ரூபாய் 30 வழங்க வேண்டும் என்ற முறையில் இத்திட்டம் கிராமங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டம் தனியார் மூலம் நிறைவேற்றப்படவுள்ளது. ஏற்கனவே உள்ள நடைமுறையில் திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தும் குடிநீர் வழங்குவது தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் கரோனா பேரிடர் காலங்களில் மக்கள் மீது சுமையை ஏற்றும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளதை கண்டித்தும் எளிய மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தில் பணம் வசூலிக்கும் முறையை கண்டிக்க தவறி நடைமுறைப்படுத்தும் தமிழக அரசை எதிர்த்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருக்கோவிலூர் ஒன்றிய குழு சார்பில் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் கே.ரவி தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் ஏ.வி.சரவணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மாவட்டத் துணைச் செயலாளர் கே.இராமசாமி, நகரச்செயலாளர் பி.எச்.கே.பசீர் அகமது, ஒன்றிய பொருளாளர் எஸ்.கோவிந்தன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.அஞ்சாமணி, ஜே.கே..கதிர்வேல், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை கட்சி மாவட்ட தலைவர் ஏ.ஆர்.கே. தமிழ்ச்செல்வன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் எஸ் விஜய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை கண்டன முழக்கங்களாக விண்ணதிர எழுப்பினர்.