Skip to main content

'ஆளுநர் மனம் இரங்காதா?' - பாமகவின் அன்புமணி ராமதாஸ் கேள்வி

Published on 19/02/2023 | Edited on 19/02/2023

 

 'Doesn't the governor feel sorry?' - Anbumani Ramadoss question from pmk

 

ஆன்லைன் ரம்மிக்கு எதிரான சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ''கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த மோகன்குமார் என்ற பட்டதாரி ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் உடல்நல பாதிப்புகள் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

ஆன்லைன் சூதாட்டம் எந்த அளவுக்கு மனிதகுலத்தை வேட்டையாடுகிறது என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு நிகழ்ந்திருக்கும் 45 ஆவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் அனைவரின் கோரிக்கை ஆகும். அதற்காக திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டு  125 நாட்களாகியும் அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுப்பது  ஏற்க முடியாதது ஆகும்.

 

ஆன்லைன் சூதாட்டமும், அதற்கு அடிமையாகி இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாவது அனுமதிக்க முடியாது. எனவே, ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்; அதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
 

 

 

சார்ந்த செய்திகள்