தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் இன்று (02/04/2021) காலை திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து இன்று மாலை கடலூர் மாவட்டம் வடலூரில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற உள்ள பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
இந்த நிலையில், ஜெயங்கொண்டத்தில் இருந்து வடலூர் செல்வதற்காக விருத்தாசலம் வழியாக வந்த மு.க.ஸ்டாலின், திடீரென விருத்தாசலம் கடைவீதியில் இறங்கி, விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியின் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.
யாரும் எதிர்பாராத விதமாக மு.க.ஸ்டாலின் வாகனத்திலிருந்து இறங்கி, கடைவீதியில் நடந்து சென்று சாலையோர கடைகளிலும், நடந்து சென்ற பொதுமக்களிடமும், பேருந்தில் பயணித்த பயணிகளிடமும் வாக்கு சேகரித்தார். அந்த சமயத்தில் பொதுமக்கள் ஆச்சரியத்தில் அவருடன் செல்ஃபி எடுத்தும், கைகுலுக்கியும் தங்களது இன்ப அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.
கடைவீதியில் இறங்கிய மு.க.ஸ்டாலின் கடைவீதி, மேம்பாலம் வழியாக பாலக்கரை வரை நடந்தே சென்று வாக்கு சேகரித்துவிட்டு, பின்னர் வாகனத்தில் ஏறி வடலூர் நோக்கி சென்றார்.
கூட்டணிக் கட்சி வேட்பாளருக்காக திமுக தலைவர் திடீரென நடந்து சென்று வாக்கு சேகரித்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.