கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,985- லிருந்து 19,984 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 603- லிருந்து 640 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,260-லிருந்து 3,870 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 5,218 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 722 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 251 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசு கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்படவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாகச் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் 'எதிர்கட்சி தலைவர் இக்கட்டான சூழலிலும் மலிவான அரசியல் செய்கிறார்' எனக் கூறினார். அதிமுக அமைச்சரின் இந்தக் கருத்துக்கு திமுகவினர் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பேரிடர் காலத்திலும் அதிமுக அரசு மக்கள் நலனில் ஆர்வமின்றி செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல், மருத்துவப் பரிசோதனை கருவிகள் கையிறுப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கேள்விக்கு சுகாதாரதுறை அமைச்சர் பதில் அளிக்காததைக் குறிப்பிட்டு பேசிய அவர் 'யார் மலிவான அரசியல் செய்கிறார்கள்?:' எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மாலை நேரக் கச்சேரியில் இன்றைய பாடகர் யார் என்பது போல, கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் அறிவிப்பு என்ற பெயரில், அதிமுகவினர் போட்டிப் போட்டுக் கொண்டு விளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர் என இந்த விளம்பர வேட்கை தொடர்கிறது.
அதோடு, கரோனா வைரஸ் தனது வேட்டையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மூன்று நாளில் கரோனா ஒழிந்துவிடும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நான்காவது நாளிலும், கரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை கூடிக் கொண்டிருப்பதையும், உயிரிழப்பும் ஏற்பட்டிருப்பதையும், மாலை நேரக் கச்சேரியின் பாகவதரான சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது அறிக்கையில் உறுதிப்படுத்தியிருக்கிறார். கரோனா நோய்த் தொற்று அபாயத்தைத் தொடக்கம் முதலே வலியுறுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தி, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்தக் கோரி வருபவர் திமுக தலைவர் ஸ்டாலின் எனவும் குறிப்பிட்டுள்ளார்.