Skip to main content

‘தப்பா ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க... வாபஸ் வாங்குங்க...’ - ஓ.பி.எஸ். குறித்து சீறியப் பெண்... அட்வைஸ் செய்த ஸ்டாலின்...

Published on 20/01/2021 | Edited on 20/01/2021

 

ddd

 

தேனி மாவட்டத்தில் உள்ள அரண்மனைப்புதூர் ஊராட்சியில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர். ஸ்டாலின் பேசுகையில், "உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் கட்சிதான் அராஜகம் செய்வார்கள். ஓட்டு எண்ணும் இடத்திலும் அக்கிரமம் செய்வார்கள். அதனை மீறி 70% இடங்களில் வெற்றி பெற்றோம். அதற்கு காரணம் மக்கள்தான். ஆட்சியில் இல்லாத 10 ஆண்டுகளில், ஆட்சியில் இருப்பதுபோல நாங்கள்தான் மக்களுக்காக பணியாற்றியிருக்கிறோம். 

 

கரோனா தொற்று நோயால் பலரையும் இழந்திருக்கிறோம். 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் இறந்துபோனார்கள். அப்படிப்பட்ட கொடிய நோய் பற்றிய ஆராய்ச்சி நடந்துவருகிறது. தடுப்பூசி போடவே பயப்படுகிறார்கள்; சந்தேகப்படுகிறார்கள். இப்படியான நிலையில், உயிரையே பணயம் வைத்து, ‘ஒன்றிணைவோம் வா’ இயக்கம் மூலம் மக்களுக்காக களத்தில் நின்றார்கள். மருந்து மாத்திரை, மளிகை, உணவு என மக்களின் கஷ்டத்தைப் புரிந்துகொண்டு செயல்பட்டது தி.மு.க.. ஆட்சியில் இருப்பதுபோல செயல்பட்டோம்.

 

தொகுதி சட்டமன்ற உறுப்பினர் யாருனு தெரியுமா? ஓ.பி.எஸ் தானே? பாத்திருக்கீங்களா? பன்னீர்செல்வம்னா, ரொம்ப பணிவா இருப்பாரா? பதவி வரும்போது பணிவு வரனும். பதவி வரும்போது எப்படி மாறினார் என்பது உங்களுக்குத் தெரியும். சமீபத்தில் வீடியோ எடுத்து வெளியிட்டார். அவ்வளவு அமைதியா, உத்தமபுத்திரர் மாதிரி ஒரு காட்சி. மக்களை ஏமாற்றுகிறார்.

 

அரசியலில் லக்கில் வந்தவர். மூன்று முறை முதல்வர் பதவி கிடைத்தது. மூன்று முறை முதல்வராக இருந்து, நாட்டுக்காக என்ன செய்தார்? நாட்டு மக்களுக்கு என்ன செய்தார்? ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்குனு சொன்னார். என்ன மர்மம்னு அவரும் சொல்லல, ஆளும் கட்சியினரும் சொல்லல. 

 

27ம் தேதி சசிகலா வெளியே வந்த பிறகு, ஓ.பி.எஸ் இந்தப் பதவியில் இருப்பாரா என்று கூட தெரியாது. அது அவர்கள் பிரச்சனை. எடப்பாடி என்று சொன்னால், அந்த ஊருக்கு அவமானம். பழனிசாமி என்று சொல்லுங்க. ஜெயலலிதா நினைவிடத்தில் 40 நிமிடம் தியானம் செய்தார். நீதி விசாரணை கேட்டது நாங்கள் இல்லை. இறப்பில் மர்மம் இருக்குணு சொன்னது நான் இல்ல. 

 

ஆறுமுகசாமி விசாரணை கமிசன் அமைத்து மூன்று வருடத்தை தாண்டியாச்சு. என்ன ஆச்சுணு தெரியல. விசாரணைக்கு ஆஜராக்கச் சொல்லி, எட்டுமுறை கூப்பிட்டும் இவர் போகவில்லை. பாக்கெட்டுல, டேபிள்ல ஜெயலலிதா படத்தை வைத்து ஏமாற்றுகிறார்கள். யார் விட்டாலும் ஸ்டாலின் விடமாட்டான்" என்றார்.

 

கூட்டத்தில் நாகலாபுரம் ராஜாத்தி பேசும்போது, “தர்ம யுத்தம் செய்துவிட்டு, ஜெயலலிதா சமாதிக்குப் போய் தியானம் செய்து, சாவு பற்றி விசாரணை பண்ணுவோம்னு சொன்னார். விசாரணையும் இல்லை. விசாரிக்கப் போகவும் இல்லை” என்று கூறினார்.

 

இதுபோல் பூதிப்புரம் லெட்சுமி பேசும்போது, “முதல்ல ரோடு போட்டாங்க. கமிசன் வாங்கினதுனால ரோடு பேந்துபோச்சு. ரோட்டுக்கு பச்சர் போடுறாங்க. ஓ.பி.எஸ் எங்க ஊருக்கு வந்தா கொலையே பண்ணுவேன்” என்று கூறினார். 

 

ddd

 

அப்போது ஸ்டாலின் குறுக்கிட்டு, ''எவ்வளவு ஆத்திரம் இருக்குணு வெளிப்பட்டது. தப்பா ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க. ஜனநாயத்தில் முறை இல்லை. நீங்கள் சொன்ன வார்த்தையைத் திரும்ப வாங்கிக்கிறேன் என்று சொல்லுங்க'' என்றார்.

 

''நாங்க ரொம்ப வெறுப்புல இருக்கோம். கோபத்துல இருக்கோம். உங்களுக்காக மன்னிப்பு கேட்கிறேன். அவரிடம் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்'' என்றார் பூதிப்புரம் லெட்சுமி.

 

ஸ்டாலின்: சொன்ன வார்த்தையை வாபஸ் வாங்கிக்கிறேன் சொல்லுங்க.

 

பூதிப்புரம் லெட்சுமி: வார்த்தையை வாபஸ் வாங்கிக்கிறேன். 

 

பிரேமலதா ஆதிபட்டி: நான் ஒரு செவிலியர். யாருக்கும் கல்விக் கடன் தள்ளுபடி ஆகல. எனக்கும் தள்ளுபடி ஆகல என்றனர். 

 

அதன்பின்னர் பேசிய ஸ்டாலின், “போடியில் மாம்பழ கூழ் தொழிற்சாலை கொண்டுவரவில்லை. சங்கராபுரம் பகுதியில் சிப்காட்டிற்கு பூமி பூஜை மட்டுமே போடப்பட்டுள்ளது. குமுளி போக்குவரத்து பணிமனை இல்லை. அரண்மனை புதூர், கொடுவிலார்பட்டி, நாகலாபுரம் போன்ற பகுதியில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படவில்லை. குரங்கனி டாப்ஸ்டேசன் போன்ற பகுதிகளில் விளையும் விளைபொருட்களைக் கொண்டு செல்வதற்கு சாலை வசதி இல்லை. திமுக ஆட்சி காலத்தில் விலைவாசிகள் குறைவாக இருந்தது. அதிமுக ஆட்சியில் சிலிண்டர், பருப்பு உள்ளிட்ட அத்யாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது” என்று கூறினார்.

 

சார்ந்த செய்திகள்