தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரை நியமிக்கும் அதிகாரம் கட்சியின் தலைவரான ஸ்டாலினும் வழங்கப்பட்டுள்ளது.
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளிக்காட்சி மூலம் நேற்று (09/09/2020) நடைபெற்றது.
இதில் தி.மு.க. பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதேபோல் துணை பொதுச்செயலாளர்களாக ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் நியமனம் செய்யப்படுவதாக அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேபோல் தி.மு.க. விதிகளிலும் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரை நியமிக்கும் அதிகாரம் கட்சியின் தலைவரான ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர்களைக் கட்சியின் பொதுச்செயலாளர் நியமித்து வந்த நிலையில், சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தி.மு.க.வில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவரும் துணைப்பொதுச்செயலாளராகும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்திருத்தத்தால் தி.மு.க.வில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் விரைவில் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆதிதிராவிடர், மகளிர், பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.