சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் எஸ்.ஆர் பார்த்திபன் போட்டியிடுகிறார். அதுபோல அதிமுக சார்பில் கே.ஆர்.எஸ் சரவணனும், அமமுக சார்பில் எஸ்.கே.செல்வமும் போட்டியிடுகின்றனர். இவர்கள் மூவருக்கும் இடையே தான் இங்கு கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் வாக்குப்பதிவு நாளான இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். காலை 9 மணி நிலவரப்படி ஓமலூர் பகுதியில் சராசரியாக 18% வாக்குகள் பதிவாகியிருந்தன. என்.செட்டிபட்டி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் மொத்தம் 5 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். மேலும் மாற்றுத்திறனாளிகளை அழைத்து வர நான்கு சக்கர வாகனங்களை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. பல இடங்களில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் சக்கர நாற்காலியில் வந்து ஆர்வத்துடன் வாக்களித்ததையும் பார்க்க முடிந்தது.
சேலம் வடக்கு தொகுதியில் 87,179,128,134,176,148 ஆகிய வாக்குச்சாவடிகளில் வாக்கு இயந்திரங்கள் பழுதாகி இருந்தது. அதனால் இந்த வாக்குச்சாவடிகளில் முக்கால் மணி நேரம் வரை ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை. பிறகு தகவலறிந்த தேர்தல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள பழுதை சரி பார்த்தனர். இதனால் வாக்காளர்கள் சிறிது நேரம் வாக்களிக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.
முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது வீட்டிற்கு அருகே உள்ள சிலுவம்பாளையம் அரசு பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியிலும், திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் மிட்டாபுதூர் அரசுப் பள்ளி வாக்குச்சாவடியிலும், அமமுக வேட்பாளர் எஸ்.கே.செல்வம் பூலாவரி அரசுப்பள்ளி வாக்குச்சாவடியிலும் வாக்களித்தனர்.