2023 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர், ஆளுநர் ரவி உரையுடன் 9ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் கூட்டத் தொடரில் ஆளுநர் படிக்கும்போது, உரையில் சில வார்த்தைகளைத் தவிர்த்துவிட்டுப் படித்ததற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, முதல்வர் உரையாற்றிக் கொண்டிருக்கும் பொழுதே ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகள் மற்றும் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றியபோது நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதிய சீலிடப்பட்ட கடிதத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, வில்சன் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் அடங்கிய குழு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துக் கொடுத்தனர்.
அவ்வாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழக ஆளுநர் ரவிக்கு அறிவுரை வழங்குமாறு வலியுறுத்தியிருந்தார். மேலும் அந்தக் கடிதத்தில், 'தமிழ்நாடு மற்றும் அதன் மக்களுக்கு ஏற்ற வகையில் பணியாற்ற ஆளுநருக்கு அறிவுரை கூற வேண்டும். மரபுகளை மீறாமல் தமிழ்நாடு மக்களுக்கு பணியாற்ற அறிவுறுத்த வேண்டும். சுமுகமான உறவு மக்களாட்சியின் முக்கிய அமைப்புகளிடையே நிலவ வேண்டும்' எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று டெல்லி செல்லவுள்ளார். காலை 11.20 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி செல்லும் ஆளுநர் இன்றும் (ஜன.13) நாளையும் (ஜன.14) டெல்லியில் இருப்பார் எனத் தெரிகிறது. இப்பயணத்தில் தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அல்லது குடியரசுத் தலைவரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.