நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.
அந்த வகையில் முதன்முதலாக தேர்தல் களத்தை சந்திக்கிறார் விஜயகாந்தின் வாரிசான விஜய பிரபாகரன். தே.மு.தி.க சார்பில் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தில் விஜய பிரபாகரன் பேசியதாவது, “விஜயகாந்த் உடைய தைரியம் எனக்கும் இருக்கிறது. அது ரத்தத்திலே எங்க அப்பா எனக்கு கொடுத்தது. ஆனால், அந்த தைரியத்தை வைத்து மட்டும் இந்த தேர்தலை என்னால் சந்திக்க முடியாது. அந்த தைரியத்தை மக்களாகிய நீங்கள் முரசு சின்னத்தில் வாக்களிப்பதன் மூலம் கொடுக்க வேண்டும்.
மக்களை தங்கத்தட்டில் வச்சு தாலாட்ட வேண்டும் என்று எங்க அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். நிச்சயம் இந்த விருதுநகர் மக்களை தங்கத்தட்டில் வச்சு தாலாட்ட நான் தயாராக இருக்கிறேன். உங்க வீட்டில் இருக்கிற பசங்க வயசுதான் எனக்கும் இருக்கிறது. எனக்கும் பல ஆசைகள் இருக்கிறது, ஆனாலும் அதை எல்லாம் ஓரம் கட்டி ஒதுக்கி வைத்துவிட்டு எங்க அப்பாவோட கனவை நிறைவேற்றவும், எங்க கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் இந்த மக்கள் முன்னாடி நான் வந்து நிற்கிறேன் என்றால் மக்களுக்கு நீங்கள் எனக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும்.
அதேபோல், இளைஞர்கள் பலரும் எத்தனையோ வாய்ப்பு தேடி சுற்றிக் கொண்டிருப்பார்கள். அந்த மாதிரி என் தந்தை தாய் ஸ்தானத்தில் இருக்கின்ற மக்கள் ஆகிய உங்களிடம் ஒரு வாய்ப்பை தருமாறு கேட்கிறேன். ஏனென்றால், வாய்ப்பு கொடுத்தால் தான் நாங்கள் என்ன செய்வோம் என்று உங்களுக்கு தெரியும். இரண்டு முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்து பத்து ஆண்டுகளாக எம்.பியாக ஆக்கி அவரை பார்த்தீர்கள். ஆனால், அவரது முகம் கூட பலருக்கும் தெரியாது. ஏன் அவர் பெயர் கூட யாருக்கும் தெரியாது.
எம்.ஜி.ஆர் வழியில் வந்தவர் விஜயகாந்த். இரண்டு தலைவர்களுமே, தன் சொந்த பணத்தை மக்களுக்கு செலவு செய்த தலைவர்கள். அந்த வழியில் வந்தவர்கள் தான் அ.தி.மு.க- தே.தி.மு.க கூட்டணியும். ‘புலி 8 அடி பயந்தால் குட்டி 16 அடி பாயும்’ என்று சொல்வார்கள். நான் ஆணவத்தில் பேசவில்லை, எங்க அப்பாவோட ஆசை நிறைவேற்றுவதற்கு 16 அடி இல்லை 32 அடி கூட பாய்வதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால் அந்த வாய்ப்பை கொடுத்தால் தான் அதை நிரூபிக்க முடியும். விஜயகாந்த் புதைக்கப்படவில்லை கோடிக்கணக்கான மக்களின் மனதில் விதைக்கப்பட்டுள்ளார். இன்றைக்கு எம்ஜிஆர் மறைவு, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பெருசா பேசப்படுவது விஜயகாந்தினுடைய மறைவு மட்டும் தான்
யூடியூப், ரீல்ஸ் போன்றவற்றை பார்த்து, இளைஞர்களாகிய நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு ஏதோ ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டு விடாதீர்கள். இந்தத் தொகுதியிலேயே தங்கி உங்களுக்கு செய்ய நான் தயாராக இருக்கிறேன். துளசி கூட வாசம் மாறும், ஆனால் தவசி வார்த்தை மாறவே மாறாது. சொன்னா சொன்னதுதான். நிச்சயமாக உங்களுக்கு சேவை செய்ய தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.