Published on 16/07/2019 | Edited on 16/07/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரன் கட்சிக்கும், தேமுதிகவுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இரண்டு கட்சிகளும் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரன் கட்சி 6 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது. தேமுதிக 3 சதவிகிதத்துக்கு குறைவான வாக்கு பெற்று மாநில கட்சி அந்தஸ்த்தை இழந்தது. இதில் அதிமுக-பாஜக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக வடசென்னை, திருச்சி, விருதுநகர், கள்ளக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் படுதோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில் தேமுதிக தலைமை மீதி இருந்த அதிருப்தியால் கன்னியாகுமரி மாவட்ட தேமுதிக செயலாளர் ஜெகநாதன் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக-பாஜகவுடனான கூட்டணி தொடரும் என பிரேமலதா தெரிவித்திருந்தார். இதில் அதிருப்தி அடைந்த கிருஷ்ணகிரி மாவட்ட தேமுதிக செயலாளர் சந்திரன், தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார். தேமுதிக, அமமுக கட்சியினர் திமுக மற்றும் அதிமுகவில் இணைந்து வருவதால் இவ்விரு கட்சி தலைமைக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் தினகரன் கட்சியில் இருந்து வெளியேறும் நிர்வாகிகள் அதிமுகவிலும், தேமுதிக நிர்வாகிகள் திமுகவிலும் இணைந்து வருகின்றனர்.