Skip to main content

‘தனித்துப் போட்டியா? கூட்டணியா?’ - பாஜக தலைவர்களின் கருத்தால் குழம்பும் தொண்டர்கள்

Published on 15/12/2022 | Edited on 15/12/2022

 

Different views of Tamil Nadu BJP leaders on the alliance

 

பாரதிய ஜனதா கட்சியின் மையக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.

 

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மையக்குழு கூட்டம் சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவி, முன்னாள் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மேலிட இணைப் பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்குக் கிளை அளவில் பாஜகவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

 

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், “நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜக தயாராகி விட்டது. அதிமுக உடனான கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. அதிமுக உட்கட்சி விவகாரத்தில் எந்த மாற்றமும் இல்லை. தமிழகத்திலும் பாஜக முதன்மைக் கட்சியாக வரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என்றார்.

 

நேற்று முன் தினம் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக துணைத்தலைவர் கே.பி ராமலிங்கம், “தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தை முன்னிறுத்தி பாஜக தனித்துப் போட்டியிட்டுத் தேர்தலில் வெற்றி பெறும் முயற்சியில் இருக்கிறது. பாஜக தலைமையில் கூட்டணி என்ற பேச்சிற்கே இடமில்லை. தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என்றால் தனித்து நிற்போம். கூட்டணியில் இருந்தால்தான் வெற்றி ஏற்படும் எனும் நிலை வந்தால் கூட்டணிக்கான முயற்சியை அப்பொழுது எடுப்போம்” எனக் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்