குஜராத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மீண்டும் 7 ஆவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் இன்று தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது அதேபோல் இமாச்சலிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். தோல்வி அடைந்ததற்கான காரணத்தை பாஜக ஆராயும்” எனக் கூறினார்.
அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து குஜராத்தில் பாஜக மண்ணைக் கவ்வும் என்றும் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்றும் சொன்னார்கள். ஆனால் மண்ணைக் கவ்வியது அவர்கள்தான். இமாச்சல பிரதேசத்தில் மிகச்சிறப்பாக வெற்றி பெற்றிருக்க வேண்டும். வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் என்பது மிகப்பெரிய அளவில் இல்லை.
கடந்த 3 மாதங்களாக குஜராத் தேர்தல் குறித்து திராவிட கட்சிகள் என்ன சொன்னார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். தொடர்ந்து பாஜக தோல்வி அடையும் எனச் சொன்னார்கள் இதற்காகத்தான் குஜராத்தில் கிடைத்த வெற்றி மாபெரும் வெற்றி எனச் சொன்னோம்” என்றார். குஜராத்தில் பாஜக பெற்றுள்ள வெற்றி குறித்து அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை எனச் செய்தியாளர்களின் கேள்விக்கு, “ஏனெனில் மிக முக்கிய கூட்டத்தில் அண்ணாமலை கலந்துகொண்டு உள்ளார். நானும் நரேந்திரனும் துணைத்தலைவர் என்ற அடிப்படையில் கட்சியின் சார்பில் அண்ணாமலைக்காக செய்தியாளர்களைச் சந்திக்கிறோம்.
இமாச்சலில் ஏற்பட்ட தோல்வியை இமாச்சல் பாஜகவும் அகில இந்திய பாஜக தலைவர்களும் விவாதிப்பார்கள். காரணங்களை ஆராய்வார்கள். விவசாயிகளைக் கண்டுகொள்ளவில்லை என்பதற்காக 1% ஓட்டு வித்தியாசம் வருமா? அதனால் இல்லை. ஒரே ஒரு விஷயம் தான் காரணம் என்று சொல்ல முடியாது. இச்சிறு பின்னடைவைக் கட்சி ஆராயும்” என்றார்.