தேனியில் மதிமுக சார்பாக அக்கட்சியின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேனி தனியார் விடுதியில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. விலையை கட்டுக்குள் வைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடு வாடகைக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளது, நடுத்தர வர்க்கத்தை பாதிக்கும். இதை திரும்பப்பெற வேண்டும். முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு கொண்டு செல்லும் பொருட்களை தடுத்து நிறுத்தக்கூடாது. சுங்கக் கட்டணத்தை உயர்த்துவோம் என ஒன்றிய நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சுங்கக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதற்கு முன்னதாக பத்திரிக்கையாளர்களிடம் பேசிய துரை வைகோ, “மதிமுகவை பலப்படுத்துவது தொடர்பாக அமைப்புத் தேர்தல் நடத்த வேண்டும். அதற்காக கிளைக் கழகம் முதல் அனைத்து நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்டம் தோறும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ளேன்.
கரோனாவில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டு இருக்கும் மக்களுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு மரண அடியாக அமைந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் விலையை உயர்த்த வேண்டியதுள்ளது என்று கூறும் ஒன்றிய அரசு, ஐந்து மாநில தேர்தலுக்கு பின்னர் தான் விலையை உயர்த்தியுள்ளது. கரோனா ஊரடங்கின்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 40 டாலருக்கும் கீழ் குறைந்திருந்த போதும்கூட கலால் வரியை 70 சதவீதம் அளவிற்கு உயர்த்தி அப்போதும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தத்தான் செய்ததே தவிர ஒன்றிய அரசு குறைக்கவில்லை.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் முந்தைய அதிமுக அரசின் செயல்பாடுகளைக் காட்டிலும் திமுக அரசின் செயல்பாடுகள் சிறப்பாகவே உள்ளது. நியூட்ரினோ திட்டத்தை முதன் முதலில் எதிர்த்தவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தான். அவரது எதிர்ப்பால் தான் இந்தத் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரும் இந்தத் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். வைகோ போராட்டத்தின் மூலம் பெற்ற பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளில் நியூட்ரினோ திட்டமும் ஒன்று.
சொத்து வரி உயர்வு குறித்து தமிழக முதலமைச்சரிடம் மதிமுக சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நடுத்தர மக்களை பாதிக்கும் சொத்துவரி உயர்வு குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவு எடுப்பார். சொத்து வரி உயர்வை எதிர்த்து போராடும் அதிமுகவினர், மத்திய அரசு உயிர்காக்கும் மருந்துகளின் விலை மற்றும் பெட்ரோல் விலை உயர்த்தியதை எதிர்த்து ஏன் போராட்டம் நடத்தவில்லை” என்று பேசினார்.