![dddd](http://image.nakkheeran.in/cdn/farfuture/OkAj2NDt-MA6wQ3s5CjMkLZVzz_H_H2g3vm0ucOtwGE/1608296475/sites/default/files/inline-images/400_67.jpg)
கோப்புப்படம்
கடந்த நாடாளுமன்றத் தேர்தல்முதல், அதிமுக கூட்டணியில் பாமக இருந்து வருகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் உள்ள அதே கட்சிகள் நீடிக்கிறது என்று தெரிவித்த அதிமுக, பாமகவை தங்கள் கூட்டணியில் இருந்து விட்டுவிடக் கூடாது என்று நினைக்கிறது.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல், எம்.ஜி.ஆர் பெயரை பிரச்சாரத்தில் பயன்படுத்தி வருகிறார். ரஜினி தொடங்கும் கட்சியும் தேர்தல் களத்தில் ஈடுபட்டால், அதிமுகவுக்கான வாக்குவங்கி சரியுமா என்ற அச்சத்திலும், வடமாவட்டங்களில் கூடுதல் வாக்குகள் பெற பா.ம.க அவசியம் தேவை என்றும் அதிமுக நினைக்கிறது.
இதனைப் பயன்படுத்தி பாமக, தங்களுக்கு பாஜகவுக்கு கொடுக்கிற தொகுதிகளைவிட குறைவாகக் கொடுக்கக்கூடாது என்றும், துணை முதல்வர் பதவி வேண்டும் என்கிற நிபந்தனையுடன் அதிமுக தலைமையிடம் பேசி வருகிறது.
ஆனால், அ.தி.மு.க தலைமை, துணை முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க யோசிப்பதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து பாமகவுடன் அ.தி.மு.க தலைவர்கள் பேசி வருகின்றனர்.
கடந்த பத்து வருடங்களாக ஆட்சியில் இல்லாத தி.மு.க, தீவிரமான களப்பணியில் இருக்கிறது. கமல் மற்றும் ரஜினி வருகை, மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிரான பிரச்சாரம் இவற்றையெல்லாம் தாண்டி ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமானால், கூட்டணியில் சில விசயங்களை விட்டுக் கொடுத்துதான் செல்லவேண்டும் என்ற முடிவுக்கு அ.தி.மு.க வருமா? இல்லை அ.தி.மு.க சமாதானத்தை பா.ம.க ஏற்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார்கள் இருகட்சியினரும்.